Published : 08 Jul 2025 05:48 AM
Last Updated : 08 Jul 2025 05:48 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும் போலீஸார் விசாரித்தனர்.
போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 2 பேர் கொடுத்த ஆதாரங்கள், மாநகராட்சி ஊழியர்கள் அளித்த தகவல்கள், சொத்துவரி மட்டுமல்லாது மேலும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் ரகசியமாக அனுப்பிய ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போலீஸார் அறிக்கை தயார் செய்தனர்.
இதனால் எந்த நேரத்திலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் உருவானது. இந்நிலையில் அதிமுக சார்பில் சொத்துவரி முறைகேட்டை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், இந்த முறைகேடு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து முதல்வரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மதுரை வந்தார். அவரது தலைமையில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆணையர் சித்ரா முன்னிலையில் மண்டலம்-2 தலைவர் சரவண புவனேஷ்வரி, மண்டலம்-3 தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம்-4 தலைவர் முகேஷ் சர்மா, மண்டலம்-5 தலைவர் சுவிதா ஆகியோரிடம் தனித்தனி யாக விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் இவர்கள் 4 பேரிடமும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.மேலும் நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமி ஆகியோரிடமும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. மண்டலம்-1 தலைவர் வாசுகி இந்த விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT