Published : 08 Jul 2025 05:15 AM
Last Updated : 08 Jul 2025 05:15 AM
சென்னை: தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவையாவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைக்கு ஏற்ப கூடுதலாக மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்ைகபடி, தேவையான இடத்துக்கு அங்கன்வாடிமையங்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில் புதிய பகுதிகளில் புதிய மையங்களை தொடங்கவும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதேபோல் குறைவான பயனாளிகளை கொண்டு அருகருகே இயங்கி வரும் இரு அங்கன்வாடி மையங்களை இணைக்கவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்துக்கு அருகேயும் மலைப்பகுதிகளிலும் புதிதாக குறு மையங்களை தொடங்க கடந்த 6 மாதங்களாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட இவையாவும் தமிழக அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளன. நடைமுறைப்படுத்தினாலும் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 54,483 அங்கன்வாடி மையங்களும் தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT