Published : 08 Jul 2025 04:43 AM
Last Updated : 08 Jul 2025 04:43 AM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து 4 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகிய 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் 4 மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு, நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும் பணிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டம், சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்க்கும் திட்டம், அமைப்புசார நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது போன்ற திட்டங்களை ஆய்வு செய்தார்.
இதேபோல் ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அதுபற்றிய விவரங்களை கேட்டறிந்தார். துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்துக்குள் விரைவாக முடித்திட உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT