Published : 08 Jul 2025 12:38 AM
Last Updated : 08 Jul 2025 12:38 AM
சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பநர்கள் பணியிடங்களை, மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு,தேசிய நலவாழ்வுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் மருத்துவர் அருண் தம்புராஜ், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை (டிபிஎச்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்), மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) ஆகிய இயக்குநரகங்களில் காலியாகவுள்ள செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்பநர் (3-ம் நிலை) பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த மே 21 மற்றும் ஜூன் 23-ம் தேதிகளில் துறைசார் கலந்தாய்வு கூட்டத்தை துறையின் செயலாளர் நடத்தினார்.
முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காலியாகவுள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான முடிவு ஆகும். அதற்கேற்ப செயல்பட்டு, தற்காலிக அடிப்படையில் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பநர்கள் (3-ம் நிலை) ஆகியோர் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர்என்பதையும், இப்பணி தற்காலிகமானது என்பதையும் உறுதிபடசம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக நுட்பநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் அப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான நியமன நடைமுறைகள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT