Published : 07 Jul 2025 06:14 AM
Last Updated : 07 Jul 2025 06:14 AM
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி ரோடு ஷோ நடத்தும் அவர் பல்வேறு இடங்களில் மக்களிடம் பேசுகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ர காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்துகிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பேருந்து நிறுத்தம், பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம், துடியலூர் ரவுண்டானா மற்றும் சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இரவு கோவையில் தங்கும் அவர் நாளை மாலை 4 மணிக்கு கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி பேருந்து நிலையத்தில் மக்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து சாய்பாபா காலனியில் ரோடு ஷோ நடத்துகிறார். மாலையில் வடகோவை சிந்தாமணி, டவுன்ஹால் கோனியம்மன் கோயில், சுங்கம் ரவுண்டானா, புலியகுளம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தொண்டர்களுக்கு அழைப்பு... அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்ற புரட்சிப் பயணத்தை உங்கள் முழு ஆதரவுடன் நான் தொடங்கியுள்ளேன். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் இந்தப் பயணத்தில் என்னோடு பயணிக்க வேண்டும்.
கட்சியின் பொதுச் செயலாளராக நான் பொறுப்பு வகித்தாலும், தொண்டர்களில் ஒருவன்தான். தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் பொற்காலத்தை ஏற்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து, மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடிக்கும் திமுக அரசால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாம் செய்த சாதனைகளை உரக்கச் சொல்ல வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உறுதியாக வெல்லும். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். இவ்வாறு பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT