Published : 07 Jul 2025 12:54 AM
Last Updated : 07 Jul 2025 12:54 AM
சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறிவருவது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ‘கூட்டணி கட்சியில் இருந்து விலகிவருபவர்களை திமுகவில் சேர்ப்பதில்லை’ என்ற கொள்கையில் இருந்து விலகி, மதிமுக நிர்வாகிகளை சமீபத்தில் சேர்த்துக் கொண்டது திமுக. இது மதிமுகவுக்கு மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கெனவே, வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாத நிலையில், திமுகவின் இந்த நடவடிக்கை மதிமுக தொண்டர்களிடம் கடும் எதிர்ப்புஅலைகளை ஏற்படுத்தியது. பொதுக்குழு உள்ளிட்ட ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் இதை காட்டமாகவே வெளிப்படுத்தினர். எனினும், ‘திமுகவுடன் கூட்டணி தொடரும்’ என திட்டவட்டமாக தெரிவித்த வைகோ, தொண்டர்களையும் சமாதானம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவை மத்திய அமைச்சராக்கும் முயற்சியில் வைகோ ஈடுபடுவதாக தகவல் பரவியது. இதை உறுதி செய்யும் வகையில், “சில திமுக கூட்டணி கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றன” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை வைகோ கடந்த 2-ம் தேதி சந்தித்து, பாஜகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த நிலையில், 25 தொகுதிகளில் களப்பணிகளை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “மதிமுக மாநாடு, மண்டல வாரியான செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். இதை தொடர்ந்து,அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த உள்ளோம். இதில், 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சி அங்கீகாரத்தை பெறும் வகையில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேநேரம், இந்த விஷயத்தில் இறுதி முடிவை தலைமை எடுக்கும்” என்றனர்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டமதிமுக, 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT