Published : 07 Jul 2025 12:28 AM
Last Updated : 07 Jul 2025 12:28 AM
சென்னை: ஐசிஎஃப் ஆலையில் இந்த நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை ஐசிஎஃப்-ல் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அதிலும், தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது வரை 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில், அம்ரித் பாரத் ரயில் (சாதாரண வந்தே பாரத் ரயில்) தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. அதாவது நீண்ட தூர பயணத்துக்கு பொதுவான வசதிகளுடன் ஏசி அல்லாத அம்ரித் பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து,கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
22 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், ஏசி அல்லாத இருக்கை வசதி பெட்டிகள், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியாக இன்ஜின்கள் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கான 20 பெட்டிகளும், சரக்கு எடுத்துச்செல்ல 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 3 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, 200-க்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக, 50 ரயில்களை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில்கள் தயாரிப்பு பணி வேகமாக நடைபெறுகிறது. ஐசிஎஃப் ஆலையில் நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு இதுவரை 4 அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்துள்ளோம். நடப்பு நிதியாண்டுக்குள் 15 ரயில்களை தயாரித்து வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த ரயிலில் அவசர பிரேக்கிங் அமைப்பு உட்பட 12 முக்கிய வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட இருக்கை மற்றும் பெர்த்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, அவசர நிலையில் வெளியே அவசர விளக்கு வசதி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி தீவிரம்: சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை தலா 12 பெட்டிகளை கொண்ட 6 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து, பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2025-26-ம் நிதியாண்டுக்கு மேலும் 8 ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT