Published : 06 Jul 2025 09:23 AM
Last Updated : 06 Jul 2025 09:23 AM

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் புதிய கட்சி தொடங்கினார் மனைவி பொற்கொடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது மனைவி பொற்கொடி, புதிய கட்சியைத் தொடங்கினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தைக் கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடியை கட்சி தலைமை விடுவித்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் அவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, நினைவிடத்தில் 9 அடி உயரமுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் முழு உருவச் சிலையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் தாயார் கமல்தாய் கவாய் திறந்துவைத்தார். அப்போது புத்தமதச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொற்கொடி தொடங்கினார். அதைத்தொடர்ந்து, கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்து, ஏற்றி வைத்தார். நீல நிறக் கொடியின் நடுவில் பேனா ஏந்திய ஒற்றை யானை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம், இந்த புதிய கட்சியின் கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x