Published : 05 Jul 2025 05:31 PM
Last Updated : 05 Jul 2025 05:31 PM

விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மூலம் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, வரும் ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை ஜூலை 7-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியர் அல்லாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அரசுத் துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். கணவனால் கைவிடப்பட்ட 50 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x