Published : 05 Jul 2025 11:55 AM
Last Updated : 05 Jul 2025 11:55 AM
சென்னை: கூட்டணி குறித்த தவெக தலைவர் விஜய் எடுத்துள்ள முடிவு குறித்து குறிப்பிடும்போது, “மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். இது விஜய்க்கான மறைமுக அழைப்பாகவே கருதப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். ஜெயலலிதாவும் அந்த வழியில் செயல்பட்டு தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியைத் தந்தார். தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தது முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிதான். அதனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.
இப்போது நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் விதமாகவே எனது தேர்தல் சுற்றுப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளேன். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அதற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக இந்தச் சுற்றுப் பயணம் அமையும்.
இந்த சுற்றுப் பயணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் ஒரே நோக்கம். திமுக இப்போது வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு பரிதாபகரமாக உள்ளது. எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையவுள்ளன. அப்போது மேலும் பலம் வாய்ந்த கூட்டணியாக எங்கள் கூட்டணி அமையும்.
கூட்டணி குறித்து விஜய் எடுத்துள்ள முடிவு என்பது அவரின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான். அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். மக்கள் விரோத திமுக ஆட்சியை எதிர்க்கும் அனைத்து ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இணைந்து தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித் ஷா ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார். இதில் மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்ப தேவையில்லை” என்றார் பழனிசாமி.
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திங்கள்கிழமை (ஜூலை 7) கோவை மேட்டுப்பாளையத்தில் ‘புரட்சி தமிழரின் எழுச்சிப் பயணம் - மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதற்கான இலட்சினை மற்றும் பாடலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.
இதனிடையே, “வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே `மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்` எனற இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம். ‘ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்’ இந்தப் பயணத்தில் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன்” என்று தமிழக மக்களுக்கு எழுதிய மடலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம் > ‘கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்... இந்த அவல ஆட்சி தேவையா?’ - தமிழக மக்களுக்கு இபிஎஸ் மடல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT