Last Updated : 04 Jul, 2025 05:13 PM

 

Published : 04 Jul 2025 05:13 PM
Last Updated : 04 Jul 2025 05:13 PM

பாஜக, திமுகவுக்கு கண்டனம் முதல் ‘ஜாக்டோ ஜியோ’ ஆதரவு வரை: தவெக செயற்குழுவின் 20 தீர்மானங்கள்

சென்னையை அடுத்த பனையூரில் தவெக மாநில செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

சென்னை: பரந்தூர் மக்கள், உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காக தவெக என்றும் துணை நிற்கும்; தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கண்டனம் உட்பட தவெக செயற்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையை அடுத்த பனையூரில் தவெக செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய்தான் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்குவது என்றும் முடிவு எட்டப்பட்டது.

மேலும், தவெகவின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது, பேரவைத் தேர்தலையொட்டி விஜய் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

  • பரந்தூர் மக்கள் உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தவெக என்றும் துணை நிற்கும்
  • கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை
  • விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம். மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்
  • நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்
  • பெரும் நட்டத்தை சந்தித்துள்ள ‘மா’விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை
  • மலைக்கோட்டை மாநகரில் (திருச்சி) நடக்கும் மணல் கொள்ளை தடுக்கபட வேண்டும்

* என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும்.

  • விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற வேண்டும்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனை திரவிய ஆலை தொடங்க வேண்டும்
  • தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்
  • ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு
  • அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
  • தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும்
  • இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு

* தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

  • கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்
  • தவெகவுக்கு எதிரான கபட நாடக திமுக அரசின் அராஜகப் போக்குக்கு கண்டனம்
  • தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கண்டனம்

* காவல்துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம் மற்றும் பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு கண்டனம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசும்போது, “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத் தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x