Published : 04 Jul 2025 04:21 PM
Last Updated : 04 Jul 2025 04:21 PM
சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் போலீஸார் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அதன்பின், பொன்முடிக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக் கூறி, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார்,” என கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் என எச்சரித்தார். மேலும், ‘பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோன்று பேச வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
‘அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நல்ல விஷயங்களை பேசியிருக்கலாம்’ எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT