Published : 04 Jul 2025 01:42 PM
Last Updated : 04 Jul 2025 01:42 PM

“அன்புமணிக்கு தொண்டனாகவும் செயல்படுவேன்” - பாமக எம்எல்ஏ அருள் திடீர் உருக்கம்

அருள் எம்எல்ஏ | அன்புமணி: கோப்புப் படம்

பாமகவில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அணியில் இருப்பவர் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள். இவர், பாமக தலைவர் அன்புமணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கு எதிர் வினையாற்றிய எம்எல்ஏ அருள், தன்னை நீக்குவதற்கு நிறுவனரும், தலைவராக உள்ள ராமதாசுக்கு மட்டும் அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். எம்எல்ஏ அருளை நீக்குவதற்கு தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராமதாசும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாசை அருள் எம்எல்ஏ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராமதாசும், அன்புமணியும் இணைந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். விரைவில் இணைவார்கள். தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி வருவார், வெற்றி கூட்டணியை உருவாக்கி தருவார். அன்புமணி எனது சகோதரர். அவரை நிச்சயம் சந்திப்பேன். நான் எந்த தவறும் செய்யவில்லை.

யாரும் எனக்கு கெடு விதிக்கவில்லை. 24 மணி நேரமும் என செல்போன் செயல்படும். வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்எல்ஏ ஆகியோர் எனது நண்பர்கள். அவர்களை பற்றி நான் எதுவும் கூற மாட்டேன். ராமதாஸ் சொல்லும் வேலையை மட்டும் தான் செய்வேன். அவருக்கு ஆலோசனை கூறும் நிலையில் நான் இல்லை. ராமதாசை விட்டு, வேறு தலைவரை தேடினால்தான் இரட்டை வேடம் போடுபவர் என அர்த்தம். 1988-ல் யாரை தலைவராக நான் ஏற்றுக் கொண்டேனோ, என் உயிர் உள்ள வரை அவரது வழியில் செயல்படுவேன்.

ராமதாசை தொடர்ந்து எனக்கு தலைவர் அன்புமணிதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. 1 லட்சம் முறை கூறினாலும், என் அண்ணன் அன்புமணி தான் என் தலைவர். அவர் என்னை நிர்வாகியாக வைத்துக் கொண்டால், உடனிருந்து பொறுப்பாளராக பணியாற்றுவேன். இல்லை என்றால் அன்புமணியின் ஆதரவாளராக, தொண்டராக பணியாற்றுவேன். இருவரும் இணைந்த பிறகு கட்சியை விட்டு வெளியே போ என அன்புமணி சொல்ல மாட்டார். அப்படியே சொன்னாலும் பாமக பிரமுகராக செயல்படுவேன். இன்னொரு தலைவரை நான் தேடமாட்டேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x