Published : 04 Jul 2025 12:30 PM
Last Updated : 04 Jul 2025 12:30 PM
சென்னை: என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சி விவகாரத்தில் இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வீதம் 2022 லோக் ஆயுக்தா (மக்கள் நீதிமன்றம்) வாயிலாக சென்று மக்களுக்காக பெற்றுத் தரப்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அதன் பின்னணியும் இன்னும் தீராத வேதனையும் ஏராளம். ஏராளம்.
இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பல ஏக்கர் நிலங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வீதம் கருணைத் தொகையாகவும் உயர்த்தி தரப்பட்டுள்ளதில் இருந்து இதை பார்க்கலாம். திமுக கவுன்சிலர் மற்றும், ஆளுங்கட்சியான திமுக நிர்வாகிகளின் குடும்பங்களை சார்ந்த நிலத்துக்குரியோர் மட்டுமே பலன் பெற்றவர்களாவர் என்பதே இங்கு உண்மைநிலை.
அனைவருக்குமான பொது இழப்பீடை லோக் அதாலத் மூலமாக பெற்றிடாத வகையில் முதலில் தடுத்து நிறுத்தியவர்களும் (உள்ளூர் திமுக) இவர்கள்தான். பின்னர் முழுமையான பலனை பெற்றவர்களும் இவர்களேதான். அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்த மக்களை சட்ட விரோதமாக வாகனத்தில் அழைத்து வந்து என்எல்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தினவர்களும் இவர்கள்தான்.
இதெல்லாம் அழகாய் ஜோடிக்கப்பட்ட அரசியல் என்பதை அப்போது கரிவெட்டி கிராம மக்கள் அறிந்திருக்கவில்லை. நெய்வேலியின் கரிவெட்டி கிராமத்தை மையமாக வைத்து, “இந்த கிராமத்தை / கிராமத்தின் நிலத்தை எடுக்க விடமாட்டோம்” என்று மக்களுடன் சேர்ந்து என்எல்சி. நிர்வாகத்துக்கு எதிராக போராடுவது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்ததும் இதே திமுக கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அவர்களின் குடும்பத்தார்களே.
கரிவெட்டி கிராமத்தின் குடும்பங்கள் அனைத்தும் வறுமை கோட்டுக்கும் கீழேயுள்ள குடும்பங்கள். ஆனால் கருணைத் தொகையாக ரூ.10 லட்சத்தை யாருக்கு உயர்த்தி தந்தது என்எல்சி நிர்வாகம் என்பதே இதில் முக்கியம். கரிவெட்டி கிராமத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக அங்கேயே வசித்து வரும் குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக இழப்பீடு வழங்க தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்தும் கூட, என்எல்சி நிர்வாகம் அதில் பாரபட்சம் காட்டிவருகிறது, கோரிக்கை வைக்காமலே இழப்பீட்டுத் தொகையை, கொடுத்திருப்பது, திமுக கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் என்றால், இதன்பின்னே என்ன நடந்திருக்கும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
கரிவெட்டி கிராம மக்களுக்காக வழங்கப்பட்ட மாற்றுமனைகளும் அவர்கள்(N.L.C. நிர்வாகம்), அதை அடுத்த கட்டமாக கையாண்ட விதமுமே முரண்பாடானவை. ஒரு குடும்பத்திற்கு ஒரு வாழ்வாதாரம், ஒரு மாற்றுமனை, ஒரு வேலை வாய்ப்பு மட்டுமே என்று கூறும் என்எல்சி நிர்வாகம், மாற்றுமனை வழங்குவதில் முதலில் முன் வைத்த வரைமுறைகள் அத்தனையும் தலைகீழாய் மாறியது கரிவெட்டி கிராமத்துக்கு மட்டும்தான். அந்த கிராமத்துக்கு எதிராகத்தான். இதை பாருங்களேன்.
(1) பழைய குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும்.
(2) 2014 -ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தனி குடும்பமாக குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும்.
(3) 2014 -ஆம் ஆண்டுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
(4) 2014 -ஆம் ஆண்டுக்கு முன்பு 'தனி பட்டா' பெற்று, வீடுகட்டி இருக்க வேண்டும்- இவற்றையெல்லாம் எல்லோருக்குமான வரையறைகளாக கூறிவந்த என். எல்.சி. நிர்வாகம்,"வீடு கட்டும் உதவித் தொகையை எந்த வரையறையின் கீழ் ஒரு சார்பினருக்கு தளர்த்தி வழங்கியது" என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. என்எல்சி நிர்வாகம் சொன்னது வேறு செய்தது வேறு.
ஒரே குடும்பத்தை சார்ந்த இரண்டு நபர்கள் வீதம், மொத்தம் இரண்டு குடும்பங்களுக்கு; நான்கு மாற்றுமனை மற்றும் வீடு கட்ட பணம் வழங்கியதும் இதே சார்பு நிலைப்பாட்டின் படியே என்.எல்.சி. சாத்தியப்படுத்தி இருக்கிறது. ஒரே குடும்பத்தில் இரண்டு நபர்களும், ஒரே குடும்ப அட்டையின் கீழ் மட்டும்தான் உள்ளனர். இதை விதிவிலக்காக என்.எல்.சி.நிர்வாகம் எப்படி கையாண்டதோ அதேபோல் மீதமுள்ள குடும்பங்களுக்கும் விதிவிலக்கை கையாளாமல் பாரபட்சம் காட்டி புறந்தள்ளுவது ஏற்புடையது அல்ல. அது ஏமாற்று வேலையும் கூட.
2019 -ஆம் ஆண்டுக்குப் பிறகு திருமணம் ஆகிய ஒருவர், அதன் பிறகே குடும்ப அட்டையும் பெற்ற ஒருவருக்கு மாற்றுமனை வழங்கப்பட்டுள்ளது, இது எந்த விதிமுறையின் கீழ் செய்யப்பட்டது என்பதற்கும் பதில் இல்லை. 2019 -ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் அட்டை மாற்றப்பட்டு, கணவர் வாக்காளர் அட்டை கரிவெட்டி கிராமத்தில் வசிப்பாளர் இல்லாமலே ஒரு குடும்பத்துக்கு மாற்றுமனை வழங்கப்பட்டுள்ளது எந்த விதிமுறையில் வருகிறது?
வீட்டை அளக்கும் போது வீட்டின் மதிப்பை கணக்கிடுவதிலும் ஒரு சார்பு நிலையை கையில் எடுத்துள்ளது என்எல்சி நிர்வாகம். ஆளுங்கட்சியான திமுகவை சார்ந்த குடும்பங்களுக்கு மட்டும் நிலத்தின் - மனையின் மதிப்பை மிக அதிக தொகைக்கு மதிப்பிட்டு செய்து அதற்கேற்ப இழப்பீடு மிக அதிகமாக வழங்கப்பட்டுள்ளது எந்த விதிமுறைப்படி நடந்திருக்கிறது?
திமுகவை சார்ந்த கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், அவர்கள் குடும்பத்தாரின் வீடு - மனைகளை விட பெரிய அளவிலான பிற குடும்பத்தாரின் வீடு - மனைகளுக்கு மிகக் குறைவான மதிப்பீட்டு காட்டி, அதைவிட குறைந்த மதிப்பீட்டிலான இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கி உள்ளது எந்த மாதிரியான நிலைப்பாடு? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறான் என்பார்கள், இது பூசணி தோட்டத்தையே சோற்றில் மறைத்தது போல் அல்லவா இருக்கிறது? என்எல்சி. வேலைகளுக்கு ஆள் எடுப்பிலும் இதைவிட கண்கூடான ஏமாற்று வேலைதான் நடந்திருக்கிறது.
திமுக மற்றும் திமுக சார்பு உறவுகளுக்கும், என்எல்சி நிலம் எடுக்க உதவிய என்.எல்.சி. சார்பு நிலை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும், இலகுவான வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. மற்ற குடும்பங்களை சார்ந்த நபர்களுக்கு பாலம் கட்டும் பணி சார்ந்த மிகக் கடினமான வேலைகளை ஒதுக்கித் தந்துள்ளனர்.
கரிவெட்டி கிராமத்து மக்களுக்கான சிறு தேவைகளாக முன்வைப்பது, மாற்று குடியிருப்பில் கோயிலின் நிலப்பரப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதோடு, கிராம இளைஞர்கள் உடற் பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் சொந்த மைதானம் ஒன்று தேவை என்பதும் அடங்கும். விதிமுறைகள் மீறி ஒரு சில குடும்பங்களுக்கு, அரசியல் பின்புலம் மற்றும் ஆளுங்கட்சி பலம் போன்றவைகளை முன்னிறுத்தி பலபல செயல்கள் நடைமுறையாக்கப் பட்டிருப்பதை உணர்ந்தே இருக்கிறோம்.
மாற்றுமனை, வீடு கட்ட பணம், கூடுதல் மதிப்பீட்டுத் தொகை, குறைந்த அளவேயுள்ள நிலங்களுக்கு கூடுதல் விலை, கூடுதல் வாழ்வதாரம், ஒதுக்கீடு பணிகளில் சார்புநிலை போன்ற எத்தனையோ விஷயங்களில் என்.எல்.சி. நிர்வாகம் கேடு செய்திருந்த போதிலும் கரிவெட்டி கிராம மக்கள் மனம் தளரவில்லை. என்எல்சியை வெறுக்கவில்லை.
தங்களுக்கு இழைக்கப்பட்ட எண்ணற்ற கொடுமைகளையும், துரோகங்களையும், துரோகத்துக்கு துணை போனவர்களையும் மறந்து அல்ல, மன்னித்து மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை வைத்து கெஞ்சுகிறார்கள் என்பதால் அவர்களை எளிதில் புறந்தள்ளி விடலாம் என நினைப்பது வேதனைக்கும், சோதனைக்குமே என்எல்சி நிர்வாகத்துக்கு வழி வகுக்கும்
எங்களுக்கு முழுமையான வாழ்வாதாரம், கரிவெட்டி கிராமத்தை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்களுக்குள் எந்தவொரு பிரிவினையும் ஏற்படாது காக்க - பாகுபாடு பார்க்காத இழப்பீடு தொகையை என்எல்சி வழங்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். கரிவெட்டி மக்களின் நம்பிக்கையை இந்த இறுதிச்சுற்றிலும் என்எல்சி நிர்வாகம் சீர் குலைக்குமானால் பாட்டாளி மக்கள் கட்சி, பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி பாட்டாளி சொந்தங்களோடு களம் இறங்கத் தயங்காது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT