Published : 04 Jul 2025 11:49 AM
Last Updated : 04 Jul 2025 11:49 AM
சென்னை: லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லாக்-அப் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொதுமக்களுக்கு போலீஸார் தரும் தொந்தரவுகள் குறித்து, முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வரதட்சணை கொடுமையால் தமிழகத்தில் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் தவறுதான். எனவே, லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சினிமா துறையில் மட்டும்தான் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகக் கூறமுடியாது. பள்ளி, கல்லூரி உள்பட எல்லா இடத்திலும் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது. திரைத் துறையில் 2 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதால், உடனே திரைத்துறையில் போதைப்பொருள் அதிகமாகி விட்டது என்பதா?
இதை தடுப்பதற்கான வழியைப் பார்க்காமல், பூதக்கண்ணாடி வைத்து, பெரிதாக்கக் கூடாது. ஊசி மூலம் போதை உட்கொள்ளும் நிலையும் இருக்கிறது. போதைக்கு அடிமையானவரை எப்படி மீட்பது? என்ற வழியைப் பார்க்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT