Published : 04 Jul 2025 01:42 AM
Last Updated : 04 Jul 2025 01:42 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பழனிசாமி அறிவித்திருந்தார். பல்வேறு காரணங்களால் சுற்றுப்பயணம் தள்ளிப்போனது. இந்நிலையில் `மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவையில் தொடங்குவதாக பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கோவை, விழுப்புரம், கடலூர்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வரும் 21-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். முதல் நாளான ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அன்று கவுண்டம்பாளையம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 5 இடங்களில் பழனிசாமி பேச, கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
மேலும், சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதிமுக ஆட்சி அமைந்தால் அதற்கான தீர்வுகள் கிடைக்கும் என பழனிசாமி உறுதியளிக்க இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இணக்கமான சூழலை ஏற்படுத்த... அதேபோல், அதிமுக-பாஜக தொண்டர்களிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில், பழனிசாமி தொடங்கும் சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் பாஜகவின் முக்கியத் தலைவர்களை அழைக்கவும் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோரை பழனிசாமி தரப்பினர் அழைத்ததாகவும், நயினார் நாகேந்திரன் பங்கேற்பதாக உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு, அதிமுகவிடம் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என கூறப்படுகிறது. பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை ஒழுங்குபடுத்தவும், அவரது சுற்றுப்பயணத்தை பாதுகாப்பாக நடத்தவும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அதிமுக சார்பில் நேற்று மனு அளிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT