Published : 03 Jul 2025 09:21 AM
Last Updated : 03 Jul 2025 09:21 AM
திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின் பலனை தங்களுக்கானதாக அறுவடை செய்து கொண்டது பாஜக.
மாநாட்டை நடத்துவதற்கு காவல் துறை தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் நீதிமன்றம் வரைக்கும் சென்று தளர்த்தி மாநாட்டை நடத்தி முடித்தார்கள். இந்த நிலையில், முருகபக்தர்கள் மாநாடு கூட்டப்பட்ட அதே அம்மா திடலில் 6-ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக அரசியல் பிரிவு) மாநில மாநாட்டை நடத்துவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்து முன்னணி மாநாட்டுக்குப் போட்டியாக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என ஒரு தரப்பினரும், முஸ்லிம்களின் பலத்தைக் காட்டி அதற்கேற்ப கூட்டணியில் சீட் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த மாநாடு என ஒரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாநாடு குறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மே 31-ம் தேதியே மதுரையில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டோம். திமுக பொதுக்குழு, அதன் பிறகு முருகபக்தர்கள் மாநாடு என அடுத்தடுத்து வந்ததால் எங்களது மாநாடு தள்ளிபோனது. நாங்கள் யாருக்கும் போட்டியாக மாநாடு நடத்தவில்லை. நாட்டின் சட்டம் இயற்றும் அவைகளில் முஸ்லிம்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் தேவை என வலியுறுத்துவதே மாநாட்டின் நோக்கம்.
எங்களுக்கு, நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் உரிய பிரநிதித்துவம் இல்லை என, உணருகிறோம். இந்தச் சூழலில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டுள்ள பிஹார் மாநிலத்தில் அது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தேசிய குடியுரிமை பட்டியலிலுள்ள தகவல்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது. எல்லோரும் எல்லா ஆவணங்களையும் வைத்திருக்க முடியாது. இது போன்ற சூழலில் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட, பட்டியலினத்தவர்களின் வாக்குகள், மற்றும் அங்கே ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்காதோரின் வாக்குரிமை பறிக்கப்படுமோ என அஞ்சுகிறோம். இதையெல்லாம் மனதில் வைத்தே இம் மாநாட்டை நடத்துகிறோம்.
தேர்தல் சமயத்தில் கூடுதல் சீட்களை பெறுவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறதா என்று கேட்டால், நாங்கள் கூடுதல் சீட் கேட்போம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. பாராளுமன்றத்தில் உள்ள 543 உறுப்பினர்களில் 80 இஸ்லாமியர்கள் இருக்கவேண்டும். ஆனால், 24 பேர் மட்டும் உள்ளனர். ராஜ்ய சபாவில் 35 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் 14 இஸ்லாமிய எம்எல்ஏ-க்கள் இருக்க வேண்டிய இடத்தில் 7 பேர் மட்டுமே இருக்கிறோம்.
இந்தியா முழுக்க 4,123 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். இதில் 296 பேர் மட்டுமே இஸ்லாமிய எம்எல்ஏ-க்கள். உள்ளாட்சிகளிலும் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. தமிழகத்தில் 7 சதவீதம் இஸ்லாமியர்கள் இருக்கிறோம். ஆனால், அதற்கேற்ப எங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இதையெல்லாம் பேசுவதற்காகத்தான் மாநாட்டைக் கூட்டுகிறோம். இந்த மாநாட்டில் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஆளும் கட்சி தொடங்கி அனைத்துக் கட்சிகளும் மதுரையை மையப்படுத்தியே மாநாடு உள்ளிட்ட தங்களது நிகழ்ச்சிகளை நடத்தி பலம் காட்டி வருவதால் தூங்கா நகரம் துறுதுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT