Published : 03 Jul 2025 09:15 AM
Last Updated : 03 Jul 2025 09:15 AM
“கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமை குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்” என்று சொல்லி சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வான இரா.அருளை கட்சியிலிருந்து அதிரடியாய் நீக்கி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதனைத் தொடர்ந்து அருளிடம் பேசினோம்.
பாமக-வில் பிரச்சினை வெடித்து பல வாரங்கள் கடந்த பிறகு திடீரென ராமதாஸுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது ஏன்?
பாமக-வை உருவாக்கியவர் மருத்துவர் அய்யா. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களால் மதிக்கப்பட்ட தலைவர் அய்யா. அவர் குழந்தையாகவும், கைப்பாவையாகவும் மாறிவிட்டார் என்று கூறுவதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த வேதனையால், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். ஆனால், தலைவர் உட்பட யாரைப் பற்றியும் நான் தவறாகப் பேசவில்லை.
பாமக-வின் எதிர்காலம் அன்புமணி என்ற நிலை இருக்கும்போது அவரை விமர்சித்துவிட்டு அந்த கட்சியில் நெருடல் இல்லாமல் தொடர முடியும் என நினைத்தீர்களா?
தொடர முடியாது என்ற சூழல் கட்டாயம் ஏற்படாது. ஏனெனில், தலைவர் அன்புமணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான எந்த கருத்தையும் நான் கூறவில்லை. மேலும், என்றைக்கும் அண்ணன் அன்புமணி தான் என் தலைவர்.
செல்வகணபதி எம்பி மூலம் நீங்கள் திமுக-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவிட்டீர்கள் அதனால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள் என்கிறார்களே..?
முன்பு நேரு மூலம் என்றார்கள். பின்னர் எ.வ.வேலு மூலம் என்றார்கள். இப்போது செல்வகணபதி என்கிறார்கள். அரசியல் நாகரிகத்துடன் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் நான் பழகுவதை இப்படி எடுத்துக்கொள்வதா? என் தொகுதியில் வசிக்கும் முன்னாள் முதல்வர் பழனிசாமியுடனும் தான் எனக்கு நீண்டகால நட்பு. அதனால் நான் அதிமுக-வுக்குச் செல்ல இருப்பதாகக்கூட கூறுகிறார்கள். யார் என்ன சொன்னாலும் அருளின் மூச்சு என்றோ ஒருநாள் நிற்கும்போது என் உடல் மீது பாமக கொடி தான் போர்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
பாமக-வில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என்பது உண்மையா?
இதற்கான பதிலை மருத்துவர் அய்யா ஏற்கெனவே தெரிவித்து விட்டார்.
சுயமரியாதை கொள்கை கொண்ட பாமக-வில் இருந்துகொண்டு சுயநலத்துக்காக, பார்ப்பவர் காலில் எல்லாம் நீங்கள் விழுந்து வணங்குவதாக கூறப்படுவது பற்றி?
மூத்தவர்களை வணங்க வேண்டும் என்பதை ஆசிரியர்களான என் பெற்றோர் சிறுவயது முதலே எனக்கு வலியுறுத்தி வளர்த்தனர். மூத்தோரை வணங்குதல் நம் மண்ணின் உயர்ந்த பண்பாடுகளில் ஒன்று. இதில் சுயநலமும் இல்லை, சுய மரியாதைக்கு பாதிப்பும் இல்லை. என்னை விட வயதில் இளையவர்கள் யார் காலிலும் நான் விழவில்லை.
உங்களது ஊடக பேட்டிகள் சுய விளம்பரத்துக்கானவை என்கிறார்களே?
சாதாரண நிலையில் இருந்த என்னை எம்எல்ஏ-வாக ஆக்கியது பாமக தான். என் தொகுதி மக்களுக்கும், மாவட்ட மக்களுக்கும் இன்றைய தேதியில் நான் ஒரு பரிச்சயமான முகம் தான். இதற்கு மேல் என்ன விளம்பரம் எனக்கு தேவையுள்ளது? என் கட்சியின் தலைவரை குறைகூறி விளம்பரம் தேடிக்கொள்ளும் கீழ்நிலை எண்ணம் எனக்கு இல்லை.
ராமதாஸை சுற்றியுள்ள சில சதிகாரர்கள் தான் கட்சியில் நடக்கும் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அன்புமணி தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே?
அரை நூற்றாண்டைக் கடந்து அரசியலில் உள்ள தலைவர் மருத்துவர் அய்யா. யாரோ சொல்வதைக் கேட்டு, சிந்திக்காமல் செயல்படும் வகை தலைவர் அல்ல அவர். கட்சியில் பிரச்சினை கிளம்பியதும், “சில நாட்களுக்கு யாரும் என்னை பார்க்க வரவேண்டாம்” என்று கூறிவிட்டு அன்புமணி பனையூரில் தங்கியிருந்தார்.
அதையும் மீறி சில சதிகாரர்கள் நேரில் அவரை சந்தித்து துர்போதனை செய்ததால் தான் பிரச்சினை பூதாகரமாகி விட்டது. மருத்துவர் அய்யாவால் அடையாளம் காணப்பட்டு துரத்தப்பட்டவர்கள் இந்த சதிகாரர்கள்.
பிரச்சினை எப்போது முடியும்... இதற்கு எது தான் நிவாரணி?
என் தலைவர் அன்புமணி தற்போது பதற்றமான மனநிலையில் உள்ளார். சிலர் அவரை மெஸ்மரிசம் செய்து பதற்றத்தை மேலும் கூட்டி அவரை உச்சகட்ட மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். 108 ஆம்புலன்ஸ், சுகாதார திட்டங்கள் போன்ற மக்கள் நல திட்டங்களைக் கொடுத்த தலைவர் அன்புமணி நிச்சயம் நாட்டுக்குத் தேவை. தலைவர் ஒருவார காலம் கட்சியினர் யாரையும் சந்திக்காமல், செல்போனையும் அணைத்து வைத்து ஏகாந்த நிலையில் இருந்துவிட்டு நேராக தைலாபுரம் சென்று மருத்துவர் அய்யாவை சந்தித்து புதிய சிந்தனைகளோடு 1 மணி நேரம் பேசினாலே அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும்.
கட்சியில் இருந்து உங்களை அன்புமணி நீக்கி இருப்பது பற்றி..?
கட்சியின் நிறுவனரும், தலைவரும் மருத்துவர் அய்யா தான். அவர் தான் எனக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியவர். சின்ன அய்யா கட்சியின் செயல் தலைவர் தான். அவரால் என்னை உட்பட யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT