Published : 03 Jul 2025 06:20 AM
Last Updated : 03 Jul 2025 06:20 AM

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கட்சி பதவி பறிப்பு: அன்புமணி திடீர் நடவடிக்கை

அருள் மற்றும் அன்புமணி

சென்னை: பாமகவின் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவது, அதே பதவியில் அவர்கள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. சமீபத்தில் ராமதாஸ் பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.அருளை நீக்கிய அன்புமணி அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமனம் செய்தார். இந்நிலையில், இரா. அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவின் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக் காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், கட்சியின் விதியின்படி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜூலை 2-ம் தேதி முதல் அவர் நீக்கப்படுகிறார். கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x