Published : 03 Jul 2025 04:57 AM
Last Updated : 03 Jul 2025 04:57 AM
சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனையில் தவறான வழிகாட்டுதல்களை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்குவதாகவும், இதனால் முன்பை விட வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
குறிப்பாக, மதுபானங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கும் போது, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபாட்டில்கள் வாங்குவோருக்கு அதற்கான ரசீது வழங்கப்படும் எனவும், இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும், முறைகேடுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எந்த டாஸ்மாக் கடைகளிலும் மதுபாட்டில் வாங்கியதற்கான ரசீது குடிமகன்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து, விற்பனை செய்வதற்காக செல்போன் வடிவிலான கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான கடைகளில், குடிமகன்கள் வந்து மதுபாட்டில் கேட்கும் போது, அந்த நேரத்தில் மதுபாட்டிலை ஸ்கேன் செய்து கொடுக்காமல், முன்கூட்டியே மொத்தமாக ஸ்கேன் செய்து இருப்பு வைத்துக் கொண்டு, ஸ்கேன் செய்து வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களை எடுத்து ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அதற்கான ரசீதையும் குடிமகன்களிடம் வழங்குவதில்லை. அந்த ரசீதுகளை வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகளிடம் காட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
ரூ 1 லட்சம் வரை கைமாற்றம்: மேலும், மொத்தமாக முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களில், விற்பனையாகாமல் இருப்பு இருக்கும் பாட்டில்களுக்கான தொகையை, கடை ஊழியர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து செலுத்தி, மறுநாள் மீதமுள்ள பாட்டில்களை விற்பனை செய்து, அதிலிருந்து தாங்கள் செலுத்திய பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தினமும், ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை பணத்தை கைமாற்றி கொள்வதாக கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், கைகளில் பணத்தை நேரடியாக வாங்காமல், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் தினமும் 50 சதவீதம் அளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், 50 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லாத கடைகளில், ஊழியர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகையை, கடையின் வங்கி கணக்குக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து, அந்த தொகையை ரொக்கப் பணமாக கடைகளில் இருந்து எடுத்து கொண்டு, 50 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ததாக கணக்கு காட்டி வருகிறார்கள்.
இது போன்ற தவறான வழிகாட்டுதல்களை டாஸ்மாக் அதிகாரிகள் தான் தங்களுக்கு வழங்குவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த வகையில், டாஸ்மாக் கடைகள் வெறும் பெயரளவு தான் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது எனவும், இதனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றும், இதனால் தங்களுக்கு தான் இதனால் வேலைப்பளு அதிகரித்துள்ளது என ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT