Last Updated : 03 Jul, 2025 02:00 AM

 

Published : 03 Jul 2025 02:00 AM
Last Updated : 03 Jul 2025 02:00 AM

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய கருவி: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயணைக்கும் ‘பந்து’

சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது.

சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் காவல் ஆணையர் தரப்பில் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மற்ற தளங்களில் சைபர் க்ரைம், மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல், போலீஸ் அதிகாரிகளுக்கான நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன.

8-வது தளத்​தில் காவல் ஆணை​யர் மற்​றும் கூடு​தல் ஆணை​யர்​களுக்​கென தனித்​தனி அலு​வல​கம் உள்​ளது. காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ​ஸார் பணிபுரி​கின்​றனர். இது​போக அமைச்​சுப் பணி​யாளர்​களும் பணி​யாற்​றுகின்​றனர். பல்​வேறு வழக்கு தொடர்​பான முக்​கிய​மான ஆவணங்​களும் இங்கு பாது​காக்​கப்​படு​கின்​றன.

இந்த நிலை​யில், தீ விபத்து ஏற்​பட்​டால் பெரிய அளவி​லான அசம்​பா​விதம் மற்​றும் இழப்பு ஏற்​படு​வதை தவிர்க்​கும் வகை​யில் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள 8 தளங்​களி​லும் பல்​வேறு இடங்​களில் ‘AFO’ (ஆட்டோ ஃபயர் ஆஃப் ஃபயர் எக்​ஸ்​டிங்​குஷர் பால்) எனப்​படும் கால்​பந்து வடிவி​லான ‘தீயை அணைக்​கும் தானி​யங்கி நவீன கரு​வி’ பொருத்​தப்​பட்​டுள்​ளது.

விபத்து ஏற்​பட்டு தீப்​பிடித்​தால், வெப்​பத்​தால் பந்து வடிவி​லான தானி​யங்கி தீயணைப்பு கருவி தானாகவே வெடித்து சிதறும். பின்​னர், அதற்​குள் இருக்​கும் வெள்ளை நிற ரசாயன பொருள் வெளிப்​பட்டு தீயை அணைத்​து​விடும். தீ விபத்து ஏற்​படும் சூழலில், யார் வேண்​டு​மா​னாலும் இந்த கரு​வியை எளி​தாக தீயில் வீசலாம் அல்​லது உருட்டி விடலாம். இதன்​மூலம் பெரிய அளவி​லான தீ விபத்து ஏற்​பட்​டால் கூட தீயணைப்பு வீரர்​கள் வரு​வதற்​குள் தீ அணைந்து விடும். இது மிகப்​பெரிய பாது​காப்பு அம்​சம் என போலீஸ் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘பந்து வடிவி​லான இந்த தீயணைப்பு கரு​வியை தீயில் எறிந்​தவுடன், 3 முதல் 5 விநாடிகளில் தானாகவே வெடித்​து, ரசாயன பொருளை வெளி​யிட்டு தீயை அணைக்​கும் திறன் கொண்​டது.

இது தீயை அணைக்​கும் எளிய மற்​றும் பாது​காப்​பான வழி​யாகும். இந்த கருவி விரை​வில் டிஜிபி அலு​வல​கம் மற்​றும் தமிழகம் முழு​வதும் உள்ள காவல் நிலை​யங்​கள் மற்​றும்​ காவல்​ அலு​வல​கங்​களில்​ பொருத்​தப்​பட உள்​ளன’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x