Published : 02 Jul 2025 07:26 PM
Last Updated : 02 Jul 2025 07:26 PM

அஜித்குமார் கொலை வழக்கு பரபரப்புக்காகவே சிபிஐ-யிடம் அரசு ஒப்படைப்பு: கிருஷ்ணசாமி விமர்சனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். | படம்: எல்.பாலச்சந்தர்.

திருப்புவனம்: “தமிழக முதல்வர் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை. காவல் நிலையங்களை திமுகவினர் கட்டுப்படுத்துவதை அடியோடு தடுக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புத்தில் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அடிக்கடி நிகழ்கிறது. அதற்கு எதிர்ப்புகள் கடுமையாக இருந்தாலும் கூட, தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்து வருவது வேதனை அளிக்கிறது.

காவல் துறையானது உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள வழிமுறைகளை விசாரணைக்கு அழைத்து செல்வோரிடம் கடைபிடிப்பதில்லை. அதுவும் மடப்புரம் சம்பவத்தில் நகை தொலைந்து போனதற்காக ஒரு கொலை நடந்துள்ளது. இது அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பல்ல, இது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாக கருதுகிறேன். தமிழக அரசு சிபிஐ-யிடம் விசாரணையை ஒப்படைத்துள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகம்.

கடந்த காலங்களில் தூத்துக்குடியில் இதுபோன்ற சம்பவங்களிலும் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பதவி உயர்வு தான் கிடைத்தது. பணியிட மாற்றம், பணியிட நீக்கம் என்பது கண் துடைப்பாகவே இருக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த அஜித்குமார், நகை திருடியிருப்பார் என்பது நம்பும்படியாக இல்லை. அவர்களது குடும்பத்தினரும் எங்களுக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும் என்ற கோரியுள்ளனர். தமிழக அரசு பரபரப்புக்காக சிபிஐ-யிடம் இவ்வழக்கை ஒப்படைத்துள்ளது. வழக்கை முறையாக விசாரித்து சுணக்கமின்றி குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே எதிர்காலத்தில் காவல் நிலைய சாவுகள், அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

காவல் நிலையத்தை திமுகவினர் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. பல காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் பணியாற்றும் நிலை உள்ளது. இது ஜனநாயக நாடு. பல சமுதாயம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சாதியினர் மட்டுமே இருப்பதால் இப்பிரச்சினை வந்துள்ளது. தமிழக முதல்வர் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை. எல்லா காவல் நிலையத்திலும் எல்லா சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் பணி செய்ய வேண்டும்.

இப்பகுதியைச் சேர்ந்த திமுகவினருக்கு இந்தக் கொலை வழக்கில் தொடர்புள்ளது. அப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் தீர்வு கிடைக்கும். கட்சிக்காரர்கள் காவல் நிலையங்களை கட்டுப்படுத்துவதை அடியோடு தடுக்க வேண்டும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் தமிழ்நாட்டில் இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x