Published : 02 Jul 2025 05:34 AM
Last Updated : 02 Jul 2025 05:34 AM
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கப்படும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற 'வெற்றி நிச்சயம்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் 3-வது ஆண்டு வெற்றி விழாவும், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இத்திட்டத்தையும் அடுத்த ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெறும் உலக திறன் போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 சதவீத வளர்ச்சி வீதத்தில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நான் முதல்வன் திட்டத்தால் இதுவரை 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வளர்ந்து வரும் நவீன தொழில்துறைக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப திறன், தகவல் தொழில்நுட்பம், மொழி அறிவு, ஹேக்கத்தான்ஸ், இண்டர்ன்ஷிப் ஆகியவற்றை உள்ளடக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தால் 3.28 லட்சம் மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
படித்த, வேலையில்லாத இளைஞர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் குறுகிய கால திறன் பயிற்சி வழங்கப்படும். இதற்கான செலவை அரசே ஏற்கும். சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலைதூர மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் வழங்கப்படும்.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கப்படும். மாணவர்களுக்கு உதவ நான் இருக்கிறேன். திராவிட மாடல் அரசு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார். துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, "தற்போது தொடங்கப்பட்டுள்ள வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 75 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 38 தொழிற்பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக 165 பயிற்சிகள் வழங்கப்படும்" என்றார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மேயர் ஆர்.பிரியா, உயர்கல்வித்துறை செயலர் பொ.சங்கர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் கிராந்திகுமார் பாடி, சிஐஐ தலைவர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயலர் பிரதீப் யாதவ் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT