Last Updated : 01 Jul, 2025 06:28 PM

 

Published : 01 Jul 2025 06:28 PM
Last Updated : 01 Jul 2025 06:28 PM

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? - முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்

சென்னை: “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான முன்னெடுப்பை இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் ‘ஓரணியில் தமிழ்நாடு’. மத்திய பாஜக அரசால் நம்முடைய தமிழும், தமிழ்நாடும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்று நான் உங்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை.

அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் நமக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல வேண்டும் என்றால், அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை, மத்திய அரசு பல்வேறு வழிகளில் புறக்கணிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை.தமிழ்நாட்டின் நிதி உரிமைகள் ஜிஎஸ்டி கொள்கை மூலமாக பறிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பதில்லை. தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை. பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழக அரசுதான் நிதி ஒதுக்கி நிறைவேற்றி வருகிறது.

நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது.தேசிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது. தமிழுக்கு வெறும் ரூ.113 கோடியும், சமஸ்கிருதத்துக்கு ரூ.2,532 கோடியும் ஒதுக்கி இருக்கிறார்கள்.தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைச் சொல்லும் கீழடி அறிக்கையை திட்டமிட்டு மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் நாம் தொடர்ந்து பேசுவதால், தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் வெறும் அரசியல் விமர்சனங்கள் மட்டுமில்லை. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தவை.இவை எல்லாம் அரசியல் கட்சிகளால் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட வேண்டும்.

அதற்காகத்தான், தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கள் அனைவரையும் சந்திக்கப் போகிறோம். அப்போது, திமுகவில் இணைய விரும்புவோர் தங்களை இணைத்துக் கொள்ளலாம். திமுகவில் சேர ஆர்வம் உள்ளோர் செயலி மற்றும் நேரடிப் படிவம் மூலம் பதிவு செய்யப்படுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், திமுக தனக்கான உறுப்பினர்களை சேர்ப்பதாக உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையான நோக்கம் என்பது கட்சி எல்லைகளைத் தாண்டி, தமிழ்நாட்டின் நலனுக்கானது. தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கும்போது, எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்று காட்டியாக வேண்டும்.

பாஜகவின் அரசியல் படையெடுப்பை, பண்பாட்டு படையெடுப்பை தமிழ்நாடு மீது தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரப் போரை எதிர்கொள்ள, நெஞ்சுரம் உள்ள அரசியல் சக்தி தேவை. அதை உருவாக்கத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை இயக்கமாகத் தொடங்கி இருக்கிறோம்,” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய, மக்களை சந்திக்கும்போது எவைகளெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்படும்? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், “மத்திய அரசால் தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது, எப்படியெல்லாம் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் சொல்ல இருக்கிறோம். அதேநேரத்தில், திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு செய்திருக்கும் சாதனைகள், திட்டங்கள், ஏற்கெனவே, மக்களுக்கு தெரிந்திருக்கிறது, இருந்தாலும், நினைவுபடுத்தி, துண்டு பிரசுரமாக வழங்கி, அந்தப் பிரச்சாரமும் நடைபெற இருக்கிறது. அதேபோல, உறுப்பினர் சேர்க்கைப் பணியும் நடைபெற இருக்கிறது” என்றார்.

அப்போது ‘ஓரணியில் தமிழ்நாடு’புதிய திட்டம் மட்டுமா? அல்லது தேர்தல் பரப்புரையும் இருக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர், “தேர்தல் பரப்புரையும் உண்டு. உறுப்பினர் சேர்க்கையும் உண்டு. மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடுமைகளும் உண்டு. இன்றைக்கு திமுக செய்து கொண்டிருக்கும் சாதனைகளையும் சொல்ல இருக்கிறோம்,” என்றார்.

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது? என்ற கேள்விக்கு, “தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்” என்று முதல்வர் பதிலளித்தார்.

இந்தக் கூட்டணியில் இன்னும் கூடுதல் கட்சிகள் சேர வாய்ப்பிருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின், “இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தவரைக்கும் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், வாய்ப்பு வருகின்ற நேரத்தில் அதை எப்படி சேர்ப்போம் என்று கலந்துபேசிச் செய்வோம்,” என்றார்.

அப்போது 2026-ல் எவ்வளவு சட்டப் பேரவைத் தொகுதிகளை இலக்காக வைத்திருக்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், “நாங்கள் ஏற்கெனவே 200 தொகுதிகள் என்று சொல்லியிருக்கிறோம். அதைத் தாண்டிதான் வரும் என்று நினைக்கிறேன்” என்றார்.

அமித்ஷா மதுரையில் பொதுக் கூட்டத்துக்கு வந்தபோது, நான் இனி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருவேன் என்று பேசியிருந்தது குறித்த கேள்விக்கு, “அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். வந்து பொய்யைப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்குத் தெரிகிறது.

அது எங்களுக்கு தேர்தல் நேரத்தில் லாபமாக அமையும். அதேபோன்று, இந்த ஆளுநரை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், ஆளுநர் மக்களுக்கு நல்லது செய்தாலும் இனி எடுபடாது. அந்தளவுக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவர்களெல்லாம் அடிக்கடி வர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x