Published : 01 Jul 2025 02:14 PM
Last Updated : 01 Jul 2025 02:14 PM
திருப்புவனம்: மடப்புரம் கோயில் பின்புறம் அஜித்குமாரை தனிப்படையினர் தாக்கிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார்.
பின்னர் தனது காரை ‘பார்க்கிங்’ செய்யச் சொல்லி, அஜித்குமாரிடம் சாவியை கொடுத்தார். அவருக்கு கார் ஓட்ட தெரியாததால், மற்றொருவர் உதவியுடன் காரை அஜித்குமார் ‘பார்க்கிங்’ செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்தார். சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, பையில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2,200 காணவில்லை.
இதுகுறித்து நிகிதா அளித்த புகாரின்பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்தநிலையில், அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து அஜித்குமாரை தாக்கி கொலை செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28-ம் தேதி போராட்டம் நடத்தினர். போலீஸார், அதிகாரிகள் சமரசத்தை அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த எப்ஐஆரில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, கீழே விழுந்து அடிபட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத், காவல்நிலையத்தில் போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். நேற்றுமுன்தினம் அவர், அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கிய இடமான மடப்புரம் கோயில் பின்புறம் பகுதியிலும் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
பின்னர் காரில் புறப்பட்ட நடுவரிடம், அங்கிருந்த பெண்கள் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டனர். அவர்களிடம் வெங்கடேஷ்பிரசாத் சம்மன் அனுப்பி முறையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே 5 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டன. மண்டையோடு முதல் கை, முதுகு, கால்கள் என அனைத்திலும் காயங்கள் இருந்தன.
18 இடங்களில் காயங்கள் இருப்பதும், பல இடங்களில் ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிஎன்எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டு, நேற்றுமுன்தினம் இரவு தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நேற்று அதிகாலை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வீட்டில் ஆஜர்ப்படுத்தினர். அவர்கள் 5 பேரையும் 15 நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
காவலர்கள் கைதை கண்டித்து, நேற்று காலை அவர்களது குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ‘ அரசுக்காக வேலை பார்த்ததுக்கு தண்டனையா? அவர்களோடு சேர்த்து எங்களையும் கைது செய்து செய்ய வேண்டும்’ என்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஐஜி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தை, ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று உள்துறை செயலர் தெரிவித்தார்.
இதனிடையே அஜித்குமாரை தனிப்படை போலீஸார் கோயில் பின்புறம் மாட்டு தொழுவத்தில் வைத்து கம்பால் தாக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் கூறியதாவது: நான், எனது அண்ணன் அஜித்குமார் உட்பட 5 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். எங்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். என்னையும் அடித்தனர். கடந்த 2 நாட்களாக போலீஸார், அஜித்குமாரை தொடர்ந்து அடித்ததால் சோர்வாக இருந்தார்.
விசாரணைக்காக எனது அண்ணனை மட்டும் மடப்புரம் கோயிலுக்கு பின்புறம் போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் நடந்து தான் சென்றார். ஆனால் திரும்பி வரும்போது, அவரை போலீஸார் தூக்கி கொண்டு வந்தனர். இதை பார்த்த நான், எனது தாயார் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்துக்கு சென்றோம். அங்கு எனது அண்ணன் இறந்துவிட்டதாக கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.
அஜித்குமாரின் தாயார் மாலதி கூறுகையில், ‘ கோயிலில் பணியில் சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. ஊதியம் கூட வாங்காதநிலையில் எனது மகன் உயிர் பறிபோகிவிட்டது. அவன் மீது எந்த வழக்கும் இல்லை. உடல்நலப் பாதிப்பும் இல்லை’ என்றார்.
அந்த வீடியோ இணைப்பு கீழே...
இதுதான் வலிப்பில் அவர் இறந்ததற்கு காரணமா?!
— VOICE OF TVK (@VoiceOfTVK_) July 1, 2025
#JusticeForAjithkumar
pic.twitter.com/mlmTAyxVCg
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT