Published : 01 Jul 2025 11:01 AM
Last Updated : 01 Jul 2025 11:01 AM

நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேலூரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

மதுரை: கூடுதல் நன்கொடை கேட்டு கடை உரிமையாளர், ஊழியர்களைத் தாக்கியதைக் கண்டித்து மேலூரில் வர்த்தகர்கள் நேற்று கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலவளவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 28-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதற்காக நன்கொடை வசூலிக்க மேலூர் பேருந்து நிலையம் அருகே பலசரக்கு மொத்த வியாபாரி திருப்பதியின் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் சென்றனர். நன்கொடை குறைவாகக் கொடுத்ததாகக் கூறி கட்சியினர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்பி சிவக்குமார், ஆய்வாளர்கள் சிவசக்தி, ஜெயந்தி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசம் செய்தனர். பின்னர் விசாரணைக்காக கடை உரிமையாளரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் மேலூர் வணிகர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று உரிமையாளர் திருப்பதி மற்றும் அவரது ஊழியர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி டிஎஸ்பியிடம் மனு அளித்தனர்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேலூர் பகுதியிலுள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பலசரக்குக் கடைகள், உணவகங்கள் என 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.

இது குறித்து மேலூர் வணிகர் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ‘நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிக்கச் சென்ற சிலர் வர்த்தகர் திருப்பதியை தாக்கி கடையைச் சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து கடை அடைப்புப் போராட்டம் நடத்தினோம்.

இது குறித்து ஆட்சியர், எஸ்பியிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்' என்றார்.

விசிக மேலூர் தொகுதி அமைப்பாளர் சீராளன் கூறுகையில், ‘மேலவளவு நினைவேந்தலையொட்டி எங்களது கட்சியைச் சேர்ந்த கங்காதரன் உள்ளிட்ட 3 பேர் நன்கொடை கேட்டுச் சென்றனர். அவர் குறைந்த தொகை வழங்கியதால் வேண்டாம் என மறுத்து வந்துவிட்டனர்.

இருப்பினும், கடை உரிமையாளரின் மகன், கங்காதரனுக்கு போன் செய்து தகாத வார்த்தையால் திட்டியால் அங்கு சென்ற எங்களது கட்சியினருக்கும், கடைக்காரர், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நானும் அங்கு சென்று சமரசம் செய்ய முயன்றபோது, என்னைத் தாக்க முயன்றனர். நானும் போலீஸில் புகார் கொடுத்தேன்.’ என்றார். இதுகுறித்து மேலூர் காவல்துறை யினரிடம் கேட்டபோது, `இருதரப்பு புகார்கள் மீதும் விசாரித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x