Published : 30 Jun 2025 07:28 PM
Last Updated : 30 Jun 2025 07:28 PM
மதுரை: திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என்ற பாமக தலைவர் அன்புமணியின் கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவால் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை கட்சிகள் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பத் திரும்ப தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தைச் சொல்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மவுனம் காக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தேன். தற்போது, அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லி இருக்கும் பதில் பாஜகவுக்குத்தான் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிமுகவை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தைச் சொல்லும் அவர், யார் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பாஜக - அதிமுக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் விசிக அதிமுகவில் சேரும் என்பது யூகம்தான். அப்படி ஒருநிலை வரும்போது பதில் சொல்கிறேன்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரை தற்காலிகப் பணிநீக்கம் செய்தது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களைத் தர வேண்டும். தமிழகத்தில் காவல் நிலைய இறப்பு நிகழக் கூடாது.
திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என அன்புமணி கேட்கிறார். பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. தந்தை - மகன் இடையே இடைவெளி பெரிதாகி விடக் கூடாது என்ற அடிப்படையில் சொன்ன பொறுப்பான வார்த்தை. தந்தைக்கு இருக்கும் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாமக இங்கே எளிய மக்களுக்காகப் போராடும் கட்சி என நம்புவதால் அவர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படக் கூடாது. இதை சனாதன சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்” என்று திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT