Published : 30 Jun 2025 06:49 PM
Last Updated : 30 Jun 2025 06:49 PM
சென்னை: “போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 30) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது முதல்வர், காவல் துறை மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கி கூறினார்.
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர், திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாக கையாண்டு வருவதையும், இவ்வரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு, அத்துடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது என்றால் அதற்கு காவல் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாய் விளங்குகின்றது என்று குறிப்பிட்டார்.
மேலும், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சட்டம் - ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களை சந்தித்து அந்த பிரச்சினை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுத்திடவும், காவல்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும் என்றும் சுட்டிக்காட்டினார். சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்திட அறிவுறுத்தினார்.
பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றச் செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ், காவல் துறை இயக்குநர் (நிருவாகம்) ஜி. வெங்கட்ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் டி. செந்தில் குமார், தெற்கு மண்டல காவல் துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆகியோர் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்கப் மரணங்கள்... - பின்னர், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ‘மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக போலீஸார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம். அவ்வாறு இல்லாமல் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன்?' என காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > அஜித்குமார் என்ன தீவிரவாதியா? - காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT