Published : 30 Jun 2025 06:27 PM
Last Updated : 30 Jun 2025 06:27 PM
திருச்சி: “ஏ.ஆர்.ரஹ்மானுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. நடிகை மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கூறினார்.
திருச்சியில் இன்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் ஸ்டாலின் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். முதல்வரின் உத்தரவை எந்த அதிகாரியும் பின்பற்றுவதில்லை. அதிகாரிகள் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. அவர் சரியாக செயல்படவில்லை.
சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. லாக்கப் மரணம் குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வாய் திறக்கவில்லை. திமுகவுடனான கூட்டணிக்காக தமிழக மக்களின் நலனை கூட்டணிக் கட்சிகள் அடகு வைத்துவிட்டன” என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, “துறை அமைச்சர் என்ற முறையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவை பார்வையிட்டேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை” என்றார்.
நடிகை மீனா குறித்த கேள்விக்கு, “அமைச்சர் என்ற ரீதியில் சினிமா துறையைச் சார்ந்த பலரை சந்தித்துள்ளேன். நான் சந்தித்த பிறகு சரத்குமார், அவரின் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார். குஷ்புவை சந்தித்த பின்னர், அவர் பாஜகவில் இணைந்தார். நடிகை மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக உள்ளது” என்றார்.
மேலும், “தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள். இதில் நான் கருத்து கூற முடியாது. கூட்டணியில் குழப்பம் இல்லை. எங்கள் கூட்டணிதான் 2026-ல் வெற்றி பெறும்” என்று எல்.முருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT