Published : 30 Jun 2025 03:50 PM
Last Updated : 30 Jun 2025 03:50 PM

திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தை துர்க்கை அம்மன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு இடையே பாதியளவுக்கு கூடுதலாக மண்ணில் ஒரு சிற்பம் புதைந்திருந்தது. இதனை துர்க்கை அம்மன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக, அதே கிராமத்தில் வசிக்கும் முரளி என்பவர் அளித்த தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. சிற்பத்தை வெளியே எடுத்து பார்த்தபோது, 3 அடி உயரம் உள்ள மூத்ததேவி சிற்பம் என தெரியவந்தது.

எளிய தலை அலங்காரம் மற்றும் ஆடை அலங்காரத்துடன் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும் இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் தவறாமல் இடம்பெறும் காக்கை கொடி, இந்த சிற்பத்தில் இல்லை.

வழக்கமாக மகன் மாந்தன், மகள் மாந்தி இருவரும் மூத்ததேவிக்கு அருகில் காட்டப்பட்டு இருப்பார்கள். ஆனால் இந்தச் சிற்பத்தில் அவளது இடுப்புக்குக் கீழே காட்டப்பட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க வித்தியாசமான அமைப்பாகும்.

பல்லவர் கலை அம்சத்துடன் காணப்படும் சிற்பம் கி.பி. 7-8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மூத்ததேவி வழிபாடு தமிழகத்தின் தொன்மையான தாய்த்தெய்வ வழிபாடாகும். இத்தெய்வத்தை தவ்வை, மா முகடி, முகடி என திருக்குறள் குறிப்பிடுகிறது. வடமொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படுகிறாள்.

தாய்த்தெய்வ வழிபாடு பல்லவர் காலத்தில் சிறப்புற்று இருந்தது. வளமை, செல்வம், குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கான தெய்வமாக மூத்ததேவி விளங்கினாள். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

கோவடி அருகில் உள்ள மொளசூர் கிராமத்திலும், சிறியதும் பெரியதுமாக இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் பகுதியில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு மூத்ததேவி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதற்கான வரலாற்றுத் தடயம்தான், கோவடியில் கண்டறியப்பட்டுள்ள சிற்பம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x