Published : 30 Jun 2025 02:59 PM
Last Updated : 30 Jun 2025 02:59 PM

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் - கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

அரசு சார்​பில் வழங்​கப்​பட்ட இலவச பட்டா ஆவணங்​கள் தொடர்​பான கோப்பு தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மாய​மானதால் கணினி​யில் பதிவேற்​று​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. மாவட்ட நிர்​வாகம் இதற்கு தீர்வு காண வேண்​டும் என, பொது​மக்கள் கோரிக்கை வைத்​துள்​ளனர் தாம்​பரம் அருகே மாடம்​பாக்​கம் கிராமம், அண்ணா நகர், சர்வே எண் 686/ஏ, 686/1சி என்ற சர்வே எண்​ணில் புஞ்சை தரிசு நில வகை கொண்ட நிலத்​தில் குடி​யிருந்த, 34 நபர்​களுக்கு கடந்த, 2008-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்​கப்​பட்​டது.

இதனை தொடர்ந்​து, 2012-ம் ஆண்டு கூடு​தலாக, 4 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த இலவச பட்​டாக்​களை கணினி​யில் பதிவேற்​றம் செய்து கணினி பட்டா வழங்க வேண்​டும் என, பொது​மக்​கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக பலமுறை மாவட்ட நிர்​வாகம், அமைச்​சர், எம்​எல்​ஏ, வட்​டாட்​சி​யர், ஜமாபந்​தி, மக்​கள் குறைதீர் முகாம் என பல்​வேறு இடங்​களில் மனு அளித்​தும் தீர்வு கிடைக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், 38 நபர்​களுக்கு வழங்​கப்​பட்ட பட்டா தொடர்​பான கோப்​பு​கள் அனைத்​தும் தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில்மாய​மாகி உள்​ளது. இதனால் இலவச மனை பட்டா பெற்ற பொது​மக்​களுக்கு பட்டா வழங்​கு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக அப்​பகுதி மக்​கள் கூறுகின்​றனர். தற்​போது புதி​தாக வீடு கட்ட வங்​கி​யில் கடன் பெற முடி​யாமல் மக்​கள் தவித்து வரு​கின்​றனர். வீடு​களை வாங்​க​வும், விற்​க​வும் முடி​யாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்​வாகம் இதில் தலை​யிட வேண்​டுமென தொடர்ந்து அப்​பகுதி மக்​கள் கோரிக்கை வைத்து வரு​கின்​றனர். தமிழக அரசும் தலை​யிட வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

இது குறித்து மாடம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்த முனி​நாதன் என்​பவர் கூறிய​தாவது: தற்​போது பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தி​லும், வங்​கி​யிலும் கணினி பட்டா இருந்​தால் மட்​டுமே பத்​திரப்​ப​திவு செய்​யப்​படு​கிறது. வங்​கி​யில் கடனும் வழங்​கப்​படு​கிறது. கடந்த, 2008-ம் ஆண்டு திமுக ஆட்​சி​யில், 34 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. அதனை தொடர்ந்​து, 2012-ம் ஆண்டு அதி​முக. ஆட்​சி​யில், 4 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. பட்டா வழங்​கும் போது காஞ்​சிபுரம் மாவட்​ட​மாக இருந்​தது. அதன் பிறகு செங்​கல்​பட்டு மாவட்​டம் என தனி​யாக பிரிந்​த​தால் ஆவணங்​கள் மாய​மாகி, வரு​வாய் ஆவணங்​களில் புறம்​போக்கு நில​மாகவே குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் பட்டா தொடர்​பாக மனுக்​கள் அளித்​தும் பதில் அளிக்​கவே இல்​லை. அனைத்து தரப்​பினரும் இதுகுறித்து மனு அளித்து விட்​டோம். தீர்வு கிடைக்​க​வில்​லை. காரணம், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் ஆவணங்​கள் மாய​மான​தால் கணினி​யில் பதிவேற்​றம் செய்ய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அதி​காரி​களின் அலட்​சி​யப் போக்கு காரண​மாக ஆவணங்​கள் மாய​மாகி உள்​ளது.

எனவே, அரசு இதில் தலை​யிட்டு பட்டா வழங்​கப்​பட்ட, 38 பேருக்கு முறை​யாக ஆய்வு செய்து அவர்​களுக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். தாம்​பரம் வட்​டத்​தில் கணினி பட்டா பதிவேற்​றம் செய்​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடைபெறுகிறது. பிரச்சினை குறித்து தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் மூல​மாக​ விளக்​கம் கேட்​கப்​பட்​ட நிலையில், வட்​டாட்சி​யர் அலு​வல​கத்​தில் ஆவணங்​கள் மாய​மா​னால், சம்​பந்​தப்​பட்ட ஆவணங்​களை மீண்​டும் பெறு​வதற்​கான நடவடிக்​கைகள் எடுக்​கப்பட வேண்​டும்.

ஆவணங்​கள் மாய​மானதற்​கான காரணத்தை அறிய விசா​ரணை நடத்​தி, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் ஆவணங்​கள் முறை​யாக பராமரிக்​கப்​படுவதில்​லை, ஆவணங்​கள்​ மாய​மாவது தொடர்​ கதை​யாக உள்​ளது என்​று கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x