Last Updated : 30 Jun, 2025 02:59 PM

 

Published : 30 Jun 2025 02:59 PM
Last Updated : 30 Jun 2025 02:59 PM

சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 30) போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்தார்.

மேலும், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மின்சாரப் பேருந்து பணிமனை: சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் (CCP-SUSP), உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மதிப்பீடு 697.00 கோடி ரூபாய் ஆகும்.

இதன் தொடர்ச்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பணிமனைகளிலும், உரிய கட்டட உட்கட்டமைப்பு, மின்னேற்றம் செய்வதற்குரிய கட்டுமான பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாகக் கட்டடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டும், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் குளிர்சாதனமில்லா பேருந்து 200 கி.மீ. இயங்கும். மேற்படி அனைத்துப் பணிகளும் நிறைவுற்று தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனை 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு முதல்வரால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள்... தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளியேறுகிறது. குறிப்பாக 2005 - 2019 காலகட்டத்தில் 10 மில்லியன் டன் CO₂ -லிருந்து 27 மில்லியன் டன் CO₂ வரை கார்பன் வெளியேற்றம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுக்கவும், சமன் செய்யவும் முடியும். மேலும், ஒவ்வொரு டீசல் பேருந்தும் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது. மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தினை பார்வையிட்டார். பின்னர் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் கலந்துரையாடினார்.

புதிய தாழ்தள மின்சார பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

  • மின்சார பேருந்தின் படிக்கட்டு உயரம் தரையில் இருந்து 400 மில்லி மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரப் பேருந்துகளில் Kneeling தொழில் நுட்ப வசதி உள்ளதால், மேலும் 250 மி.மீ. பேருந்தின் தரைத் தளத்தை கீழே இறக்கி மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மின்சாரப் பேருந்துகளில் எளிதாக அமரக்கூடிய வகையில் இருக்கைகள் சமதள உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
  • இப்பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 650 மி.மீ.-க்கு பதிலாக 700 மி.மீ. அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு எளிதாக இருக்கும்.
  • மின்சாரப் பேருந்துகளில், இரண்டு கேமராக்கள் முன் பகுதியிலும், ஒரு கேமரா பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளதால் மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது.

120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரங்கள்:

  • வழித்தட எண் (2B) - கவியரசு கண்ணதாசன் நகர் முதல் எம்.கே.பி. நகர் – சத்தியமூர்த்தி நகர் – வள்ளலார் நகர் – யானைகவுனி, சென்னை சென்ட்ரல் – பல்லவன் சாலை – மன்றோ சிலை – போர் நினைவு சின்னம் - அண்ணா சதுக்கம் வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 10 பேருந்துகள்
  • வழித்தட எண் (C33) – கவியரசு கண்ணதாசன் நகர் – கடற்கரை ரயில் நிலையம் – பிராட்வே – நேரு விளையாட்டு அரங்கம்- புளியந்தோப்பு – மூலக்கடை – வியாசர்பாடி வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 5 பேருந்துகள்
  • வழித்தட எண் (C64) - கவியரசு கண்ணதாசன் நகர் முதல் வியாசர்பாடி – சர்மா நகர் – ஜமாலியா – வள்ளலார் நகர் – எம்.கே.பி நகர் வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 5 பேருந்துகள்
  • வழித்தட எண் (18A) - பிராட்வே முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள், வழித்தட எண் 37 - வள்ளலார் நகர் முதல் பூவிருந்தவல்லி வரை 10 பேருந்துகள்,
  • வழித்தட எண் (46G) - MKBநகர் முதல் எம்.ஜி.ஆர். கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 10 பேருந்துகள்,
  • வழித்தட எண் (57) - வள்ளலார் நகர் முதல் செங்குன்றம் வரை 10 பேருந்துகள், வழித்தட எண் (57X) - வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை 10 பேருந்துகள்,
  • வழித்தட எண் (164E) - பெரம்பூர் முதல் மணலி வரை 10 பேருந்துகள்,
  • வழித்தட எண் (170TX) - MKB நகர் முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள்,
  • வழித்தட எண் (170C) - திரு.வி.க. நகர் முதல் கிண்டி திரு.வி.க. எஸ்டேட் வரை 10 பேருந்துகள், என மொத்தம் 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஆர். மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x