Published : 30 Jun 2025 05:27 AM
Last Updated : 30 Jun 2025 05:27 AM
சேலம்: அன்புமணியின் பின்னால் கட்சி நிர்வாகிகள் மட்டும்தான் உள்ளனர். ராமதாஸின் பின்னால் வன்னியர்கள், வாக்காளர்கள் உள்ளனர் என்று பாமக எம்எல்ஏ அருள் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ராமதாஸைப் பற்றி எவருமே சொல்லாத, சொல்லத் தயங்கிய வார்த்தைகளை அன்புமணி பேசியது வேதனை அளிக்கிறது. கொலை, கொள்ளை வழக்கில் உள்ளவர்கள், சாலையோரம் இலந்தைப் பழம் விற்பவர்களுக்கு ராமதாஸ் பொறுப்புகளை வழங்கியிருப்பதாக அன்புமணி கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கத்தினரை அன்புமணி இழிவுபடுத்தி விட்டார்.
ராமதாஸைச் சுற்றி 3 தீய சக்திகள் இருப்பதாக அன்புமணி கூறுகிறார். ஆனால், அன்புமணியைச் சுற்றித்தான் தீய சக்திகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தைபோல இருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். எனில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பாமக தலைவராக அன்புமணியை ராமதாஸ் அறிவித்தது எப்படி செல்லும்? ராமதாஸ் பின்னால் வன்னியர்கள், சிறுபான்மையினர், வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆனால், அன்புமணியின் பின்னால் கட்சி நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர்.
எங்கள் உயிருக்கு ஆபத்து.. சேலத்தில் அன்புமணி போட்டியிட்டால், அவரது வெற்றிக்காக நான் உழைப்பேன். அன்புமணியின் ஆதரவாளர்களால், என்னைப் போன்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலில் ராமதாஸ் வெற்றிக் கூட்டணியை அமைப்பார். எதிர்கால பாமக அன்புமணிக்குத்தான். இதில் மாற்றம் இல்லை. ஆனால், அன்புமணி பொறுத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT