Published : 30 Jun 2025 04:49 AM
Last Updated : 30 Jun 2025 04:49 AM
சென்னை: எங்கள் கூட்டணி யார் தலைமையில் என்பதை பலமுறை பல விளக்கங்களை அமித் ஷா சொல்லிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர இருக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடியில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழுவதும் நேற்று ஒலிபரப்பானது. அதன் ஒருபகுதியாக தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
இதையடுத்து, ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க உள்ளது என்ற தவறான தகவலை வேகமாக பரப்பி வருகிறார்கள். மத்திய அரசு அதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்துள்ளது.
விவசாயிகளுக்கான நிலத்தடி நீரில் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை ஜல்சக்தி துறை அமைச்சகம் தெளிவாக கூறியுள்ளது. திருமாவளவன் முதலில், திமுக தலைமையிலான கூட்டணியா, விசிக தலைமையிலான கூட்டணியா என்றுதான் அவர் கேட்க வேண்டும். அதுவே சரியாக இருக்கும். திமுக கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது. பல கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்.
அந்த கூட்டணியில் தங்களை தக்க வைத்துக் கொள்ளும் வேலையை மட்டும் திருமாவளவன் செய்ய வேண்டும். எங்கள் கூட்டணி யார் தலைமையில் என்பதை பலமுறை பல விளக்கங்களை அமித் ஷா சொல்லிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.
திமுக ஒரு முறை கடவுள் இருக்கிறது என்பார்கள். இன்னொரு முறை கடவுள் இல்லை என்பார்கள். நாம் வேல் எடுத்தால், அவர்களும் வேல் எடுப்பார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஜாதகம் பார்த்து பெயர் வைத்து கொள்வார்கள். தேவையென்றால் அவர்கள் கோயிலுக்கு செல்வார்கள். இவையெல்லாம் திமுகவின் இரட்டை நிலைபாட்டை தான் காட்டுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசுவது தமிழனுக்கு, தமிழகத்துக்கும் அழகல்ல.
ஆ.ராசா உடனடியாக பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026-ல் அமைய போவது அதிமுக ஆட்சியா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியா என்பதற்கான பதிலை பல தலைவர்கள் பல முறை சொல்லிவிட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதிமுக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT