Last Updated : 29 Jun, 2025 05:23 PM

1  

Published : 29 Jun 2025 05:23 PM
Last Updated : 29 Jun 2025 05:23 PM

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!

விருதுநகர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும் வகையில் திட்டமிட்டு களப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது விருதுநகர் மாவட்ட திமுக.

2026 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தற்போது, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையம் தொகுதிகளை திமுகவும், சிவகாசி, சாத்தூரை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுகவும் கைப்பற்றியுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டும் அதிமுக வசமானது.

இந்நிலையில், அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு திமுக இப்போதே களமிறங்கியுள்ளது. இளைஞர்கள் வாக்குகளை சிதறவிடாமல் கைப்பற்றும் முயற்சியை முதலில் தொடங்கியுள்ள திமுக, இதற்காக தனது ஐடி விங்கை தீவிரப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் அதிகமானோர் சமூக வளைதலங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதில், திமுகவை டிரெண்ட் ஆக்க அனைத்து மாவட்டங்களிலும் திமுக ஐடி பிரிவுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதோடு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகளைப் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு திமுக களப்பணியைத் தொடங்கியுள்ளது. இதற்காக தொகுதி வாரியாக தற்போது பூத் கமிட்டி நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து பயற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதில், முதல்பணியாக உறுப்பினர் சேர்க்கையில் முழு கவனத்தை திமுக செலுத்தியுள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறிப்பாக இளைஞர்களை திமுகவில் உறுப்பினராக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30% வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அதை நோக்கி திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

விருதுநகரில் சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்திலும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும், வாக்கு வித்தியாசத்தை இந்த முறை அதிகரித்து அதிக வாக்குகளில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x