Last Updated : 29 Jun, 2025 04:43 PM

2  

Published : 29 Jun 2025 04:43 PM
Last Updated : 29 Jun 2025 04:43 PM

திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? - தவெக

சென்னை: “எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?.” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர். காரில் வைத்திருந்த தன்னுடைய தங்க நகைகள் காணாமல் போனதாகக் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் நிகிதாவிற்கு உதவி புரிந்த கோவில் பாதுகாவலர் அஜித்குமார் என்பவரைக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமையே அழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர். மீண்டும் நேற்று காவல் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணையில் இருந்த போது திடீரென உயிரிழந்துள்ளார்.

திமுக ஆட்சியில், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் உயிரிழப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல சம்பவங்கள், இதற்கு உதாரணமாக உள்ளன. மேலும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, கனகம்மாசத்திரம் கர்ப்பிணிப் பெண்ணைக் காவலர் காலால் உதைத்த சம்பவம், தவெக தலைவரின் உருவம் பதித்த கைக்குட்டையை வைத்திருந்த கல்லூரி மாணவர் மீது விசாரணை என இந்த ஆட்சியில் காவல் துறையின் அராஜகப் போக்கைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டுப் புகார் அளிக்க வருவோர் மீதே காவல் துறை வழக்குப் பதிவு செய்த வரலாறும் இந்த அவல ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது.

காவல்துறையின் போக்கைக் கவனித்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது காவல் துறையின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு மாதிரியும், ஆளும் கட்சியாக மாறிய பின் ஒரு மாதிரியும் பேசுவது என்பது. தற்போதைய ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?

விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் காவல்துறையால் உரிய சட்ட விதிமுறைகளின்படிதான் விசாரிக்கப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அராஜகத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால் மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் காவல்நிலைய மரணங்களைப் பார்க்கும் போது, எங்கள் தலைவர் ஏற்கெனவே கூறியது போல் அதிகாரத் திமிர் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

சிவகங்கை மாவட்டம். திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், தவறிழைத்த காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. முறையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழாதவண்ணம், காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற வள்ளுவரின் வாக்கு ஒருபோதும் பொய்க்காது. மக்களைக் காக்கும் பணியைச் செய்யாத, அதிகாரத் திமிர் கொண்ட அராஜக, கொடுங்கோல் ஆட்சிக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை எங்கள் தலைவர் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x