Last Updated : 29 Jun, 2025 03:55 PM

1  

Published : 29 Jun 2025 03:55 PM
Last Updated : 29 Jun 2025 03:55 PM

இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து எழுதப்பட்டிருக்கும் அறிக்கையில், “இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.06.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன், IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x