Published : 29 Jun 2025 01:01 AM
Last Updated : 29 Jun 2025 01:01 AM
தென்காசி: தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள் உள்ளதால், விஜய் தமிழக முதல்வராவது உறுதி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார்.
தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசியதாவது: தவெக முன்னேறிக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள், தொழிலாளர்கள் நம்மிடம் உள்ளனர். நமக்கு விலாசம், மூச்சு எல்லாமே விஜய்தான். கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கக்கூடாது என்று விஜய் கூறியுள்ளார். அவர் சொல்படி அனைவரும் செயல்பட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தந்தை பெயர், இருப்பிடச் சான்று இருக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பெயர் நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறோம். இந்த விஷயத்தில் திமுக ஏன் மவுனம் காக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 அல்லது 3 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளனர். ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வீடுகள் இருந்தால், தவெகவுக்கு சராசரியாக 2 லட்சம் பேர் வாக்களிப்பர்.
தமிழக மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை தவெகவால் மட்டுமே கொடுக்க முடியும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வென்று, தமிழக முதல்வர் பதவியில் விஜய் அமர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தவெக ஆட்சி அமைந்ததும், சங்கரன்கோவிலில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு ஆனந்த் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT