Published : 29 Jun 2025 12:55 AM
Last Updated : 29 Jun 2025 12:55 AM
கட்சி மாற உள்ளதாகக் கூறி என்னை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸை நேற்று சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும். நான் பாமகவில் இருந்து விலகி, வேறொரு கட்சியில் சேரப்போவதாக கூறுகின்றனர். கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாக இருக்கும் என்னை கொச்சைப்படுத்துவது வேதனை அளிக்கிறது. பல பொறுப்புகளில் இருந்தபோதும் இதுவரை எந்த விமர்சனத்துக்கும் உள்ளானதில்லை.
அதிமுகவில் இணைந்தால் வாரியத் தலைவர் பதவி, எம்எல்ஏ, அமைச்சர் பதவிகள் தருவதாக எம்ஜிஆர் கூறினார். துணை முதல்வர் பதவி தருவதாக கருணாநிதி கூறினார். அதிமுகவுக்கு வருமாறு ஜெயலலிதாவும் அழைத்தார். ஆனால், ராமதாஸ்தான் எனக்கு உயிர்மூச்சு. அப்படிப்பட்ட என்னைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியவில்லை.
தனியாக இருக்கும்போது ராமதாஸ் எங்களிடம் கண்கலங்கிப் பேசுகிறார். 87 வயதான அவரை சமூக ஊடங்களில் கொச்சைப்படுத்துகின்றனர். இதற்காகவா சமுதாயத்துக்கும், நாட்டு மக்களுக்கும் உழைக்கிறார். ராமதாஸ், அன்புமணியை சமூக ஊடகங்களில் தரக்குறைவாக பதிவு செய்ய வேண்டாம். பொறுப்பாளர்களை மாற்றுவது, நியமிப்பது என்பது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. அன்புமணியை நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது, தவறாகப் பேசியதும் இல்லை.
தேர்தல் கூட்டணியை ராமதாஸ், அன்புமணி ஆகியோர்தான் முடிவு செய்வார்கள். செயற்குழு, பொதுக்குழுவில் மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பார்கள். ராமதாஸை செல்வபெருந்தகை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கூட்டணிக்கான சந்திப்பு என்று கூற முடியாது. இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT