Published : 29 Jun 2025 12:17 AM
Last Updated : 29 Jun 2025 12:17 AM
திமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக 68 ஆயிரம் டிஜிட்டல் நிர்வாகிகள் தயாராக இருப்பதாகவும், மக்களிடையே மதவாத பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்கிறேன்.
பெண்கள், இளம் வயதினர் ஆகியோர் தங்களின் தேவைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருசில திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கின்றனர். அதை கவனமுடன் கேட்டு, அதனை நிறைவேற்றுவதை முதல் கடமையாகக் கொண்டிருக்கிறேன்.
நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், நேர்மையான விமர்சனங்களைக் கவனித்து சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.
அதேநேரம் தொண்டர்களையும் நான் மறந்து விடவில்லை. அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பொறுப்பையும் சுமந்திருக்கும் ஒரு கட்சியின் தலைவர், தன் இயக்கத்தின் நிர்வாகிகளை நேரில் அழைத்து மனம்விட்டுப் பேசுவதைக்கூட பொறுக்க முடியாத அரசியல் எதிரிகளும், இன எதிரிகளும் இந்தச் சந்திப்பு குறித்த உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் வேலையைச் செய்தார்கள்.
‘மக்களிடம் செல்’ என்று பேரறிஞர் பெருந்தகை அறிவுறுத்திய வகையில், அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி, தமிழக மக்களின் மொழி - இன - சமுதாய முன்னேற்றத்துக்கான இயக்கமாக திமுகவை வளர்த்தெடுத்தார். அண்ணா, கருணாநிதி வகுத்த பாதையில் நம் பயணம் தொடர்கிறது.
மக்களுக்கான திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.
தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை மக்கள் உறுதிசெய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்துள்ளனர்.
அவர்கள், அவரவர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதிசெய்து, ஓரணியில் தமிழகத்தைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
மாநிலக் கட்சியான திமுக, இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் திமுக தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது. பயணம் உறுதி மிக்கது. இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT