Published : 29 Jun 2025 12:24 AM
Last Updated : 29 Jun 2025 12:24 AM

பலர் திமுகவில் இணைந்த நிலையில் இன்று கூடும் மதிமுக நிர்வாக குழு

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் நிர்வாகிகள் இணைந்த பரபரப்பான சூழலில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று கூடவுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் உள்ள மதிமுக நிர்வாகிகள், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்கும்படி தலைமையை வலியுறுத்த திட்டமிட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மதிமுகவுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவத்திருந்தார். அண்மையில் ஈரோட்டில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அவைத் தலைவரும் திமுகவுக்கு எதிராக கடுமையாக பேசியதாகவும் தெரிகிறது. இதற்கு பதிலடியாகவே மதிமுக நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைத்து திமுக அதிர்ச்சி கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க திமுக தலைமை தயக்கம்காட்டி வந்தது. மதிமுகவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவிடம் அதிகாரம் பெருகுவதை விரும்பாத மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியபோதும், அவர்களை அரவணைக்க திமுக தயாராக இல்லை. இந்தச் சூழலில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரை திமுக சமீபத்தில் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது. இதனால் மதிமுகவில் சலசலப்பு உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று கூடவுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றவுள்ளார். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x