Published : 29 Jun 2025 12:20 AM
Last Updated : 29 Jun 2025 12:20 AM
திமுக அரசின் தவறுகள், மக்கள் பிரச்சினைகளை சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிமுக ஐ.டி. அணி மாவட்ட செயலாளர்களுக்கு மாநில செயலாளர் ராஜ் சத்யன் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட, மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அணியின் மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
அதிமுக ஐ.டி. அணியில் சுமார் 70 ஆயிரம் நிர்வாகிகள் இருக்கிறோம். ஆனாலும், அதிமுகவின் சாதனைகள், திமுக அரசின் தவறுகள் என பொதுச் செயலாளர் பழனிசாமி சுட்டிக்காட்டுவது குறித்த செய்திகள், உள்ளூர் மக்களின் பிரச்சினைகள் ஆகியவை அதிகம் பரப்பப்படுவது இல்லை.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அனைத்து நிர்வாகிகளும் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். திமுக வைக்கும் விமர்சனங்களுக்கு வலைதளங்கள் மூலமாக உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும்.
வட்டம், பகுதி அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கி, முந்தைய அதிமுக அரசின் சாதனைகள், அதிமுக குறித்த செய்திகள், திமுக அரசின் தவறுகள், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாதது உள்ளிட்டவை தொடர்பான செய்திகள், தகவல்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறவும், பழனிசாமியை முதல்வராக்கவும் ஐ.டி. அணியின் பங்களிப்பு அதிமாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து சமூக வலைதளங்களில் உங்கள் செயல்பாடுகளை தொடங்குங்கள். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT