Published : 28 Jun 2025 05:11 PM
Last Updated : 28 Jun 2025 05:11 PM
கோவை: கோவையில் பயிற்சியுடன் கூடிய மருத்துவர் படிப்பில் சேர வந்த, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவருக்கு தாடியை அகற்ற தனியார் மருத்துவக் கல்லூரி அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதை, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் சுபேர் அகமத் (35). இஸ்லாமியரான இவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி படித்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுநீரகவியல் துறையில் பயிற்சியுடன் கூடிய மேற்படிப்பு படிக்க அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் மூலம், அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சமீபத்தில் தேர்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்த அவர் மேற்கண்ட மருத்துவக் கல்லூரியில் பயிற்சியுடன் கூடிய மருத்துவர் படிப்பில் சேர வந்தார். அப்போது அங்குள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஒரு படிவத்தை அளித்து, அதில் கேட்கப்பட்ட சுய விவரங்களை பூர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தியுள்ளனர். அதை சுபேர் வாங்கி பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது, அதில் உடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்ற தலைப்பில் சில விவரங்கள் குறித்து கேட்கப்பட்டிருந்தது.
அதில் முக்கியமாக, தாடி வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுபேர், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் இது தொடர்பாக விவாதித்துள்ளார். நான் ஒரு இஸ்லாமியர். தாடி வைப்பது எங்களது வழக்கம். இதை எடுக்க வலியுறுத்துவதை எப்படி ஏற்க முடியும்? எனக் கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகத்தினர் தரப்பில் இதுதான் இங்கு பின்பற்றும் விதிமுறை என உறுதியாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தான் அங்கு பயிற்சி பெற விரும்பவில்லை எனக் கூறி சுபேர் சொந்த ஊருக்கு சென்றார். தொடர்ந்து மறுநாள், கோவை கல்லூரியில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக, தனது எக்ஸ் தள பக்கத்தின் மூலமாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திடம் முறையிட்டு இருந்தார். மேலும், ஜம்மு - காஷ்மீரில் உள்ள மருத்துவர்கள் சங்கத்தினருக்கும் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புகாராக தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்திருந்தனர். மதச்சார்ப்பற்ற மாநிலமான தமிழகத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர். இது தொடர்பாக விசாரிக்க முதல்வர் தரப்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் தரப்பில் கூறும்போது, “தாடியை அகற்ற வலியுறுத்தவில்லை. தாடியை ட்ரிம் செய்து கொள்ள வேண்டும். இது இக்கல்லூரியின் விதிமுறை எனத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கான இடஒதுக்கீட்டில் கிடைத்த இடம் அப்படியேதான் உள்ளது. அவர் விரும்பினால் மீண்டும் இங்கு வந்து பயிற்சியுடன் கூடிய மருத்துவப் பணியை தொடரலாம்,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT