Published : 28 Jun 2025 05:30 AM
Last Updated : 28 Jun 2025 05:30 AM

விபத்தில்லா நிலையை உருவாக்க வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: விபத்தில்லா நிலையை உருவாக்க தமிழகத்தில் வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாகன விபத்தால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இச்சூழலில் மாநிலத்தில் உள்ள இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் தரத்தையும் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்.

வாகனத்தை இயக்குபவர் சாலை விதிகளுக்கு உட்பட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறாரா என்பதை தொடர் சோதனை மூலம் கண்காணிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தி, உயிரிழப்பு நிகழ்ந்தால் தவறு செய்தவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், அந்த வாகனத்தை இயக்கக்கூடாது எனவும் விதிகள் கொண்டுவரப்பட வேண்டும்.

கிராமப் பகுதி முதல் மாநகராட்சிப் பகுதி வரை அனைத்து இடங்களிலும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வாகனத்தை இயக்குவதற்கும், போக்குவரத்துக்கும் சரியான சாலை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்துக்கான விதிகளில் சமரசம் இல்லாமல், லஞ்சத்துக்கு இடம் இல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மிக முக்கியமாக தமிழக அரசு அரசுப் பேருந்துகளை தரத்துடன் இயக்கி, தொடர்ந்து பராமரித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வதற்கு தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x