Published : 27 Jun 2025 06:05 PM
Last Updated : 27 Jun 2025 06:05 PM
சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது.
இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் துளியளவும் பயனளிக்காது. மொத்தமாகவே 10 ஆயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது?
நம் நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. ஒரு மொழியைத் திணித்து, ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுமை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. எனவே அனைத்து மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT