Published : 27 Jun 2025 04:45 PM
Last Updated : 27 Jun 2025 04:45 PM
சென்னை / நெல்லை: அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதில் ஒன்றில், எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
அமித் ஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 குறித்து சில கருத்துகளை முன்வைத்திருந்தார். அதில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வங்கிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் கீழ்தான் பாஜக இருப்பதால், அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அதிமுகவில் தாங்கள் (பாஜக) யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும் அமித் ஷா தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்தக் கருத்துகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதற்கு பதிலாக ‘அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார்’ என்று அமித் ஷா குறிப்பிட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமித் ஷாவின் சமீபத்திய பேட்டி குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,“அதிமுக - பாஜக கூட்டணி என்று அமித் ஷா சொன்ன நாளில் இருந்து திமுக பயத்தில் உள்ளது. சொல்வதை எல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறது.
திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித் ஷாவும், பழனிசாமியும் முடிவெடுப்பார்கள். ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித் ஷா சொல்லிவிட்டார்” என்று தெரிவித்தார் மேலும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வருமா என்ற கேள்விக்கு ‘நல்லதே நடக்கும்’ என்று நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT