Published : 27 Jun 2025 03:54 PM
Last Updated : 27 Jun 2025 03:54 PM
திண்டிவனம்: “பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடைய உள்மனது அப்படி சொல்லாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 27) சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த 40 வருடங்களாக பொது வாழ்க்கையில் தொடர்பில் இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவரை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்ததில் எந்தவித அரசியலும் கிடையாது.
இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டின் நிறைவு விழா நடந்தது. இதில் நானும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துகொண்டோம். நேற்று இரவு நேரமாகிவிட்டதால், புதுச்சேரியில் தங்கிவிட்டு, காலையில் இவ்வழியாக போகும்போது, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டுச் செல்கிறேன்.
அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு செல்கிறேன். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்தோ, அரசியல் குறித்தோ இல்லை. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அன்புமணி- ராமதாஸ் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பாமக திமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதை யார் முடிவு செய்ய வேண்டும். திமுக தலைவரும், தமிழகத்தில் இண்டியா கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு செய்வது இல்லை” என்றார்.
பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்ற அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மீண்டும் நாங்கள் ஆட்சி அமைக்கப் போகிறோம். பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடை உள்மனது அப்படி சொல்லாது.
பாமகவில் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு திமுகவுக்கு என்ன தேவை இருக்கிறது? தமிழகத்தில் திமுக வலுவகா இருக்கிறது. வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தைக் கொண்டு செல்கின்றனர். பல்வேறு சமூக நலத்திட்டங்களைச் செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் எதற்காக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பே கிடையாது. அதை யாருமே செய்யமாட்டார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் செய்யமாட்டார். இதுபோன்ற அரசியல் எல்லாம் அவருக்கு தெரியாது.
பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பாஜகதான் காரணம். பாஜக தான் எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கட்சியை உடைத்துவிடுவார்கள். அந்த கட்சியை ஸ்வாஹா செய்துவிடுவார்கள். அடுத்தது அதிமுகவை ஸ்வாஹா செய்யப் போகிறார்கள். கூட்டணி என்று சொல்லிவிட்டு, அதிமுகவின் தலைமைக் கர்த்தாவான அண்ணாவையும், பெரியாரையும் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிடுகின்றனர். அதற்கு பெயர் என்ன?” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT