Published : 27 Jun 2025 01:53 PM
Last Updated : 27 Jun 2025 01:53 PM
திருநெல்வேலி: “திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசித் தீர்ப்பார்கள், ” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திமுக அரசு நடத்தியது உண்மையான முருகன் மாநாடு கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப்போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள், முருகன் மாநாடு நடத்தினால் முருகன் எப்படி அவர்கள் பக்கம் போவார்.
இந்து முன்னணி நடத்தியது தான் முழுக்க முழுக்க முருக பக்தர்கள் மாநாடு. இந்து முன்னணி நடத்திய அந்த மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். இந்த மாநாட்டில் யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. பிற மதங்களையோ, பிறரைப் பற்றியோ புண்படுத்தி பேசவில்லை. எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கவில்லை.
இதை தேர்தலுக்கான வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. திருச்செந்தூரில் நடைபெறும் கும்பாபிஷேகம் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. அதை வைத்து திமுக பலனடைய முயற்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக திரும்ப அமைக்க விடமாட்டார்கள். குறிப்பாக அடுத்த தலைமுறையினர் விரும்பவில்லை.
திமுகவுக்கு தேர்தல் பயம் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசித் தீர்ப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT