Published : 27 Jun 2025 05:52 AM
Last Updated : 27 Jun 2025 05:52 AM
சென்னை: விரைவு ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பிரதமரும், ரயில்வே அமைச்சரும் இதுகுறித்து முடிவு செய்து ஜூலை 1-ம் தேதி அறிவிப்பார்கள். கட்டண உயர்வை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கள உண்மையை உணர வேண்டும் என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐசிஎப் ஆலையில் வந்தே பாரத் ரயில் (ஸ்லீப்பர் வகை), அம்ரித் பாரத் ரயில், ஹைட்ரஜன் ரயில் உள்ளிட்ட ரயில்களின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடப்பு நிதி ஆண்டில் 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, 9 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் ரயில்வே துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. விரைவு ரயில்களில் கி.மீ.க்கு ஒரு பைசா மட்டுமே உயர்த்தும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது.
பிரதமர் மோடியும், ரயில்வே அமைச்சரும் இதுகுறித்து முடிவு செய்து, ஜூலை 1-ம் தேதிஅறிவிப்பார்கள். ரயில்களில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போதும் சாதாரண ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்வை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கள உண்மையை உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT