Published : 27 Jun 2025 04:25 AM
Last Updated : 27 Jun 2025 04:25 AM
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’ கெவின் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு ‘கொகைன்’ போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா என்ற கிருஷ்ண குமார் ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகும்படி, போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இல்லாமல் தலைமறைவானார்.
இதையடுத்து, 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், அவர் நேற்று முன் தினம் வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அதைத்தொடர்ந்து நேற்று மதியம் வரை அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர், தான் எந்த வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியதில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இல்லை.
மேலும், அவர் ‘எனக்கு இரைப்பை தொடர்பான அலர்ஜி உள்ளது. இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அதுதொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும் சில உடல் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன. இதனால், போதைப்பொருளை பயன்படுத்த முடியாது. நான் பயன்படுத்தியதும் இல்லை’ என உறுதியாக தெரிவித்ததோடு சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ சான்றுகளையும் காண்பித்தார்.
இதையடுத்து, கிருஷ்ணா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட வில்லை. இதனால், நடிகர் ஸ்ரீகாந்த் தவறான தகவல் கொடுத்து விட்டாரா? என போலீஸார் சந்தேகித்தனர். இதற்கிடையே, கிருஷ்ணாவின் செல்போனை பறிமுதல் செய்தனர். அதில், 2020-ம் ஆண்டுக்குப் பிறகான அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரது செல்போனை சைபர் க்ரைம் போலீஸாரிடம் கொடுத்து ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அறிவியல் பூர்வமாகவும், தொழில்நுட்பரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், நடிகர் கிருஷ்ணா, போதைப்பொருள் சப்ளையரான சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெஸ்வீர் என்ற கெவின் (35) என்பவரிடமிருந்து போதைப் பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதும், நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருந்துள்ளார் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து அது சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் கெவின் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், கெவினிடமிருந்து பல்வேறு வகையான போதைப் பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.45,200 பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணா சிக்கியது எப்படி? - போலீஸார் தேடுவதை அறிந்த நடிகர் கிருஷ்ணா நண்பர் வீட்டில் பதுங்கி உள்ளார். மேலும், அவர் சமீபத்தில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை. இதனால், அவரது உடலில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. இதை மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்து கொண்டுள்ளார். மேலும், வீடு மற்றும் செல்போனில் இருந்த அனைத்து தடயங்களையும் அழித்துவிட்டு, போலீஸார் முன்னிலையில் தைரியமாக ஆஜராகி உள்ளார்.
அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த பின்னரே அவர் போதைப்பொருள் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. அதன்பின்னர் ஜிபே மூலம் பணப்பரிமாற்றம், வாட்ஸ்அப் சாட்கள் அடிப்படையில் உறுதி செய்து கிருஷாணாவையும், கெவினை யும் கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் கிருஷ்ணாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவரது நண்பர்களுடன் சில ரகசிய குறியீடு (கோட் வேர்டு) வார்த்தைகள் வைத்து தகவல்களைப் பரிமாறி உள்ளார். அதுகுறித்து கேட்டபோது முதலில் வெவ்வேறு தகவல்களை கூறி சமாளிக்க முயன்றுள்ளார்.
இறுதியில் போலீஸாரின் பிடி இறுகியதையடுத்து, போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க போதைப் பொருள் தொடர்பான ரகசிய குறியீடாகவே அதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கிருஷ்ணா வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே கிருஷ்ணா, கெவின் ஆகியோரை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் நேற்று இரவு போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரின் உத்தரவுப்படி, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT